பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/737

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் / 689
 


இதை அடுத்தே முன்பெடுத்துள்ள சென்சஸ் ரிப்போர்ட்டர்கள் யாவரும் இந்துதேசத்திலுள்ளக் கிறீஸ்தவர்கள் யாவரையும் பொதுப்பட (நேட்டீவ் கிறிஸ்டியன்ஸ்) என வரைந்திருக்கின்றார்கள். கிறீஸ்தவப் பிரிவினைக்காரர்களுக்குக் கணக்கு வேண்டுமாயின் கத்தோலிக்குக் கிறிஸ்தவர்களென்றும், புரோடெஸ்டான்ட் கிறிஸ்தவர்களென்றும் கூறலாமேயன்றி இன்னசாதிக் கிறீஸ்தவன் இனியசாதிக் கிறீஸ்தவன் என வரைவதாயின், கிறிஸ்துவினது போதனைக்கும், செயலுக்கும் வழுவாகும். கிறிஸ்துவைக் கனஞ்செய்ய வேண்டியவர்கள் இந்தியர்களின் சாதியாசாரத்தையும், மதாசாரத்தையும் ஒழித்து கத்தோலிக்குக் கிறீஸ்தவன் அல்லது புரோடெஸ்டான்ட் கிறிஸ்தவனெனக் கூறுவதே கனமாகும்.

அங்ஙனமின்றி மநுதன்ம சாஸ்திரத்தையும், பிராமணரையும் கனஞ்செய்வதற்காய் செட்டிக் கிறீஸ்தவன், நாயிடு கிறீஸ்தவனெனச் சொல்லுவதாயின் கிறீஸ்துவை அவமதிப்பதாகும். இந்துக்களின் சாதியும் வேண்டும், கிறிஸ்துவின் மதமும் வேண்டுமென்னும் இரண்டாட்டிற்கு ஒரு குட்டிபோலும், இரண்டெஜமானனுக்கு ஒரு ஊழியன்போலும் திகைத்து கெடாது ஒரே எஜமானனைநாடி உறுதியும் சுகமும் பெற வேண்டுகிறோம்.

“கிறீஸ்தவன்” என்பதினிலக்கணம், அவன் கிறீஸ்து எனலாகும். அதாவது, கிறிஸ்துவினது கிரித்தயத்திற் பொருந்தியவன் என்பதாம். அத்தகைய சிறந்த பெயருடன் பொய்யாகிய சாதியாசாரப் பெயரைச் சேர்ப்பது மாணிக்கத்துடன் மண்ணாங்கட்டியைப் பொருந்தலொக்கும்.

- 4:16; செப்டம்பர் 28, 1910 -


29. தன்முயற்சியில்லாத் தலைமகனுக்கும் தலைகணையில்லா
நித்திரைக்கும் சுகமுண்டோ

ஒருக்காலும் இல்லையென்பது துணிபு. சிலக் கடைச்சோம்பேறிகளுக்கும், சொன்னதைச்சொல்லுங் கிளிபோல் சொல்லித்திரியும் மந்தமதி யினருக்கும் அஃதோர் சுகமென விளங்கினும் விளங்கும். ஆயினும் விவேகிகள் அவற்றை சுகமென்று கருதவேமாட்டார்.

விவேகிகள் கருதும் சுகங்கள் யாதெனில், ஒருவர் சொல்லும் சொற்களையும் ஏற்கமாட்டார்கள். ஒருவரெழுதிவைத்துள்ளக் கட்டுக்கதைகளை உடனுக்குடன் நம்பமாட்டார்கள். அவிவேகிகளின் சொற்களை ஏற்கமாட்டார்கள். அவிவேக சங்கத்தை சேரமாட்டார்கள். அத்தகையத் தெளிவான விசாரிணையினின்று தாங்கள் யெடுத்து செய்யும் காரியத்தால் தங்களுக்கும் தங்களை அடுத்தோருக்கும் தங்கள் கிராமவாசிகளுக்கும் தங்கள் தேசத்தோருக்கும் பிரயோசனத்தை உண்டுசெய்யுமெனக் கண்டறிவார்களாயின் அக்காரியத்திற் பிரவேசிப்பார்கள். அக்காரியத்தால் தங்களுக்கும் தங்களை அடுத்தோருக்கும் யாதொரு பயனும் இல்லையென்றுணர்வார்களாயின் உடனுக்குடன் கட்டோடேவிட்டொழிப்பார்கள். இது தன்முயற்சியுள்ள தலைமக்கள் செயலாகும்.

தன்முயற்சியில்லாத் தலைவர்களும் பகுத்தறிவில்லாப் பேதைகளும் யாரெனில் அப்பா, இந்த சாணச் சாம்பலிருக்கின்றதே இஃது மிக்க மேலானது. இந்தச் சாம்பலிற் புரண்டெழுந்த கழுதையும் மோட்சம் போய்விட்டதென்று கூறுவானாயின் அவ்வார்த்தையை குருவார்த்தையென ஏற்று உச்சிமுதல் உள்ளங்கால்வரை சாம்பலைப் பூசிக்கொள்ளுவானன்றி அதன் காட்சியையும் அநுபவத்தையும் விசாரித்தறியமாட்டான்.

அதாவது, சாணச் சாம்பலில் என்ன மகத்துவமிருக்கின்றது, சாம்பலிற் புரண்ட கழுதை மோட்சத்திற்குப் போயிருக்குமாயின் நிதம் சுடுகாட்டுச் சாம்பலில் உலாவும் வெட்டியார்களெல்லோரும் மோட்சத்துக்குப் போயிருக்க வேண்டுமன்றோ. அத்தகைய எளிதான வழி மோட்சத்திற்கிருக்க நந்தனென்பவனை நெருப்பிலிட்டு சுட்டு (அதாவது ரோஸ்ட்டுபோட்டு) மோட்சத்திற்கு அனுப்புவானேன்.