பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/740

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
692 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

இன்னாரென்றும் ஆய்ந்தறியும் அருளற்று இருளினின்றே தூஷிப்பர்.

அத்தகைய தூஷிப்பிற்கும் பற்பல சேஷ்டைகள் செய்வதற்கும் பெரியோர்களைத் தூற்றி பல்லிளித்து பரிகசிப்பதற்கும் காரணமாயுள்ளது முன்தோன்றியக் குரங்கின் குறைகளேயாகும்.

மக்கள் வகுப்பில் தோன்றியுள்ளதாயினும் அதனதன் விவேகமற்ற சேஷ்டைகளைக் கண்டு ஈதென்ன குரங்கின் குட்டிகளோவென வழங்குவாரும் உண்டு. இத்தகையக் காரியச் செயல்களைக்கொண்டே காரணமாய்க் குரங்கின் தோற்றத்தைக் கண்டுக்கொள்ளலாம். புழுக்களினின்று பறவைகள் தோன்றுவதென்னில் அதன் விவரமறியாதவர்களுக்கு விந்தையாகவே விளங்கும் விவரங் தெரிந்தபின் இயல்பென்றுணர்வர். பாலை ஓர் பாத்திரத்திலும் நெய்யை ஓர் பாத்திரத்திலும் வைத்து இப்பாலில் தான் இன்னெய் யுௗதென்னில் அப்பாகங் கண்டறியாதோர் நம்புவதரிது. அதன் பாகங்களைக் கண்டறிந்த பின்னர் இயல்பென்றுணர்வர். அதுபோல் மக்களது தோற்றத்தில் நரரென்றும், மக்களென்றும், தேவரென்றும் வகுக்கப்பெற்ற காரணங்களைக் கண்டறிவரேல் வால்நரரென்னுங் குரங்கினின்றே நரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பது நன்கு விளங்கும்.

- 4:28; டிசம்பர் 21, 1910 -


32. கைம்பெண்களை வீட்டில் வைத்து கண்குளிரப்
பார்க்கும் கனவான்களே!

சற்று கவனிப்பீர்களாக. ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை பகல் 12 ½ - மணிக்கு திருச்சினாப்பள்ளி ரெயில்வே ஜங்ஷன் ஸ்டேஷனில் மதுரையிலிருந்து வந்த வண்டியின் பெண்பிள்ளைகள் பிரிவிக்கு ஒதுங்குங் கக்கூசில் அப்போதுதான் பிறந்து இறந்திருக்கும் ஓர் பெண் குழந்தையைக் கண்டெடுத்தார்கள். அதனை ஈன்ற தாய் அகப்படவில்லை.

ஆதலின் ஈது சரியான நம்மநாட்டுப்பிள்ளையா அன்றேல் கைம்மனாட்டிப்பிள்ளையா என்பதைக் கலைவல்லோர்களே தெரிந்துக் கொள்ளல் வேண்டும். பெற்றவளுருப்பிடி தெரியாது பிரிவியில் போட்டுக் கிடப்பது கள்ளப்புருஷனுக்கு ஈன்றக் கைம்பெண் பிள்ளையாகும். இத்தகையக் கள்ளப்புருஷர்கள் தோணுதற்கும், கைம்பெண்கள் பிள்ளைகளை ஈணுதற்கும், செத்துக்கிடக்கும் அநாதியற்றப் பிள்ளைகளைக் காணுதற்குக் காரணஸ்தர்கள் யாவரெனில், விதவைகளை மறுவிவாகஞ் செய்யலாகாதெனத் தடுத்து அதற்காய சிலத் திருட்டு சாத்திரங்களையும், குருட்டு சாத்திரங்களையும் வரைந்து வைத்துக்கொண்டு கைம்பெண்களால் வருஷாந்திரம், திதி, தட்சணையும், அரிசி பருப்பும் பெற்று சீவிப்பதற்கு தோன்றியுள்ளப் பொய்க்குருக்களே ஆவர். அவர்களால் ஏற்படுத்திக்கொண்ட சாத்திரங்களானது அவர்களைப் பின்பற்றியுள்ளப் பேதைமக்களை வாதிப்பதுமன்றி தங்களையும் தங்கட் குடும்பத்தோரையும் நகைக்கத்தக்கச் செயலால் நசித்து வருகின்றது.

தாங்கள் வெட்டியக் குழியில் தாங்களே விழுந்து மடிவதுபோல் தாங்கள் ஏற்படுத்திக்கொண்ட சாத்திரங்களால் தங்கள் சந்ததியோர்களே கொலைப்பாதகர்களாகி சீரழிவதுடன் தங்களையும் பேரழியச் செய்துவிடுகின்ற படியால் விதவைகளை விவாகஞ் செய்யலாகாதென்னுங் கட்டுகளை அகற்றி தங்களைச் சேர்ந்த சகலசாதியாசாரமுள்ளவர்களும் வாழ்கவேண்டும் என்றும், விதவா விவாகம் நடைபெற வேண்டும் என்றும் கண்டிப்பான உத்திரவை இராஜாங்கத்தாரைக் கொண்டே சட்ட திட்டங்களில் வகுத்துவிடுவார்களாயின் கைம்பெண்களும் அதிகப்பட மாட்டார்கள். களவு பிள்ளைகளும் பிரேதமாகக் கண்களிற் காணமாட்டாது. ஆதலின் கட்டுக்கழுத்திகளைப் பார்ப்பதே கண்குளிர்ச்சியாகவும், கைம்பெண்களைக் காண்பது கண்ணெரிச்சலாகவுங் கண்டு அரியப் பெண்மக்களை அல்லல் அடையவிடாமல் ஆதரிப்பார்களென்று நம்புகிறோம்.

- 4:38; பிப்ரவரி 15, 1911 -