பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/743

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் / 695
 

வினவியுள்ள சங்கைகள் யாவும் மத்தியில் தோன்றி மறைந்தவைகளேயாம். அதாவது பிராமணர்களென்போருக்கும், கம்மாளரென்போருக்கும் சித்தூர் ஜில்லாவில் நேரிட்ட வழக்கில், கம்மாளர் ஜெயம்பெற்றபோது பிராமணர்களென்போர் பறையர்களென்று அழைக்கப்படுவோரை வலங்கையரெனத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு இவர்களுக்குக் கற்பித்த விரோதச் செயலால் அவ்வகை உண்பினையைத் தவிர்த்து வீண் விரோதிகளாகி விட்டார்களன்றி வேறில்லை. மற்றப்படி இவர்கள் அவர்களுக்குத் தாழ்ந்தவர்களல்ல அவர்கள் இவர்களுக்குத் தாழ்ந்தவர்களல்ல. பிராமணர்களென்போர் செய்த விரோதச் செயல்களேயாம்.

வசிஷ்டரைச் சக்கிலிச்சு மகனென்று கூறியுள்ள ஓர் சரித்திரத்தைக் கொண்டும் விஸ்வாமித்திரப் பரம்பரையைக்கொண்டும் மைத்துனர் முறைக் கொண்டாடிவந்த சில சரித்திரங்களை ஒட்டி பேசிவந்தபோதிலும் அவர்களது அசுத்தச் செயலை ஒட்டி உண்பினையற்றிருப்பதுடன் வாசஞ்செய்யும் வீதிகளில் பாதரட்சை அணைந்து வரப்போகாதென்றுந் தடுத்து வந்தார்கள். வைஷ்ணவ மதத்துள் சிலர் தோன்றி முத்திரை தானமென்னும் சூடுபோட்டுவிடுகின்றார்கள். அவ்வகை சூடுபோட்டுக் கொண்டவர்களுக்குள் நூதனமானச் செயல்களை அனந்தமாக ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவைகள் யாவும் பூர்வ சாஸ்திரங்களுக்கு ஒவ்வாதவைகளேயாம். சூடுண்டப்பூனை அடுப்பங் கரையேறா தென்னும் பழமொழிக்கிணங்க இவர்கள் சூடுபோட்டு நாமமிட்டுக் கொண்டவுடன் சுயசாதியோரை நெருங்காமலும், அவர்களிடம் உண்ணாமலும் தூரவே விலகிவருவதுடன் பந்து விரோதிகளுமாகி நாலு நாளையில் கெட்டு நடுத்தெருவில் நின்றுவிடுகின்றார்கள். இதுவுமோர் நூதன வேஷக் கேடுபாடுகளேயாம்.

- 5:34, சனவரி 31, 1912 -


35. மனிதனென்பவன் யார்

மனிதர்களை மனிதர்களாக பாவிப்பவன் எவனோ அவனே மனிதன். பர்ம்ம பாஷையினனாயினும் மனிதனே, சீனபாஷையினனாயினும் மனிதனே, ஆங்கிலபாஷையினனாயினும் மனிதனே, திராவிடபாஷையினனாயினும் மனிதனே கன்னட பாஷையினனாயினும் மனிதனே, மராஷ்டக பாஷையினனாயினும் மனிதனே, இத்தகைய மனிதன் பாஷைபேதமுடையவனாயினும் உருவத்தில் மனிதன் மனிதனேயாவன். மனிதவுருவம் அமையினும், சருவ உயிர்களையுந் தன்னுயிர்போற்காப்பவன் மனிதன், தன்னைப்போல் பிறரை நேசிப்பவன் மனிதன். தனக்கு ஓர் துன்பம் வரினும் ஏனையோர்க்கோர் துன்பம் வராமற் காப்பவன் மனிதன். தான் பசியுடனிருப்பினும் ஏனையோரை பசிதீர்த்து ரட்சிப்பவன் மனிதன். தான் சுகிக்க விரும்புவதுபோல் ஏனையோரையும் சுகிக்கவிரும்புகிறவன் மனிதன். தான் சுத்தநீரைமொண்டு குடிக்க விரும்புகிறவன் ஏனையோரையும் சுத்தநீரை மொண்டுகுடிக்க விரும்புகிறவன் மனிதன். தான் சுத்த ஆடைகளை அணைந்து ஏனையோரும் சுத்தவாடை அணைந்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவன் மனிதன். தான் மெத்தை மேடைகள் கட்டி வாழுங்கால் ஏனையோரும் மெத்தைமேடை கட்டி வாழவேண்டுமென விரும்புகிறவன் மனிதன். தான் அந்தஸ்தான உத்தியோகங்களைப் பெற்று வாழ்வது போல் ஏனையோரும் அந்தஸ்தான உத்தியோகங்களைப் பெற்று வாழ்கவேண்டுமென்று எண்ணுகிறவன் மனிதன். இத்தியாதி மனிதனென்னும் மானமும், சீவகாருண்யமும் அமைந்த மக்களிற் சிறந்த ஆறாவது தோற்றம் மனிதனென்று கூறப்படும். அவனே ஏழாவது தோற்ற தெய்வநிலை அடைபவனுமாவன். இவற்றிற்கு மாறாயச் செயலுடையோரை நரரென்றே தீர்க்கப்படும்.

- 5:45; ஏப்ர ல் 17, 1912 -