பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/757

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் /709
 

கருதி முன்னேறுகின்றார்கள். இத்தகைய வஞ்சினக் கூட்டத்தோர்களையே ஓர் மனுக்கூட்டத்தோரென்றும், மிலேச்சப் போதகர்களையே மெய்ப்போதகர்களென்றும், சீவகாருண்யம் அற்றவர்களையே குருக்களென்றும், எண்ணித்திரியுமளவும் இத்தேசஞ் சீர்பெறப் போகிறதேயில்லை. ஏதும் பிரயோசனமற்ற மனிதன் உலகில் தோன்றியென்ன, தோற்றாமற் போயிலென்ன, அவ்வகை மனிதவுருவாகத் தோன்றியும் மனிதர்களுக்கு உபகாரியாக விளங்காமல் மனிதனையே சீரழித்தும் மனிதனையே குடிகெடுக்கும் அபகாரியாக விளங்குவானாயின் அத்தகையோன் முகத்தில் விழிப்பதினும் அகன்று நிற்பது அழகன்றோ. அத்தகையோன் கண்ணிற்கும் புலப்படாமலிப்பதே ஆனந்தமன்றோ. இதை அநுசரித்தே மாட்டின் பிரயோசனத்தை முன்பே விளக்கியுள்ளோம். ஓர் மிருகசீவனாகிய மாட்டினால் மனிதனுக்கு அனந்தமாயப் பிரயோசனமிருந்தும் மனிதனாகத் தோன்றியுள்ளவனால் மனிதனுக்குப் பிரயோசனமாகாமல் அவனுக்குக் கேட்டை விளைவிப்பவனாகவே விளங்குவானாயின் அவன் மனிதனல்ல, மனிதனல்ல, மனிதனல்லவென முக்காலுங் கூறுதற்கு ஏதுவாகிவிடும். அவன் எத்தகைய சீரும்சிறப்பும் பெற்றுவாழினும் தீய வினையால் கேடும் பாடும் நேர்ந்து கூடுங் குடும்பமும் அழிந்தே தீரும். ஆதலின் மாடுகளது பிரயோசனத்தையேனுங் கண்டு மனிதர்களென்போர் மனிதர்களுக்குப் பிரயோசனமுள்ளவர்களாக விளங்குவார்கள் என்று நம்புகிறோம்.

- 6:46; ஏப்ரல் 23, 1913 -


46. இந்தியதேசங்கெட்டு சீரழிவதற்குக் காரணமெவை சாதிகள் வேஷமும் சமயக்கூட்டங்களுமேயாம்

இவற்றுள் முதலாவது, உலகிலுள்ள பல தேசங்களின் சீரையும் சிறப்பையும் ஆராய்ச்சி செய்வோமாக. ஐரோப்பியர், அமெரிக்கர், சீனா, ஜப்பானியர் முதலியவர்களின் சீரையும் சிறப்பையும் நோக்குங்கால் குறைவற்ற செல்வமும் நோயற்ற வாழ்வுமுற்று ஒருவருக்கொருவர் ஆனந்த சுகவாழ்க்கை யுற்றிருப்பது உலகறிந்த விஷயமேயாம். அவற்றிற்குக் காரணமோவென்னில் அத்தேசங்களுக்கு நூதனமாக ஓர் மனிதன் சென்றவுடன் நீவிர் எத்தேசத்தோர் எப்பாஷைக்குரியவர் உமக்கு என்னவித்தை தெரியுமென விசாரிப்பார்களன்றி வேறில்லை. அதாவது “வித்தையை விரும்பு” எனும் பௌத்தர்கள் போதனையின் படி அவர்சாதனமும் நிறைவேறிவருகின்றது. அவர்களது விசாரிணையுஞ் செயலுங் கண்ணுங் கருத்தும் வித்தியாவிருத்தியையும் விவசாய விருத்தியையும் நாடியிருக்குமேயன்றி வேறொரு நாட்டமுமில்லையாகும்.

எத்தேசத்தோனைக் காணினும் எப்பாஷையோனைச் சேரினும் சகோதிர ஐக்யமுற்று ஒருவர் வட்டித்த பதார்த்தங்களை மற்றவர் புசிக்கவும் அருந்தவுமான அன்பின் பெருக்கத்திலிருப்பார்கள். ஒருவருக்கொருவர் சீறலும் பொறாமெயும் வஞ்சினமும் அமைந்திருக்கமாட்டார்கள்.

அத்தகைய சிறந்த குணமும் மேலாய செயலும் அமைந்துள்ளபடியால் ஒருவர்கற்றுள்ளவித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும், ஒருவர் செய்யும் விவசாயவிருத்தியை மற்றவர்களுக்குச் செய்யவும், ஒவ்வொரு பத்திரிகைகளை நடத்துவோரும் இத்தேசத்தோர் இன்ன வித்தை இதன் வழியால் சித்திப்பெற்று இன்ன சுகமளிக்கின்றதென்றும், இன்ன விவசாயம் இவ்வகையால் சித்திப்பெற்று இன்ன பலனை அளிக்கின்றதென்றும், இன்ன வியாபாரம் இத்தகைய வழியால் விருத்தி பெற்று இன்னலாபத்தைத் தருகிறதென்றும், வரைந்து வெளியிடுவார்களன்றி அப்பிரயோசன வார்த்தைகளை வெளியிடமாட்டார்கள். அதனை உணர்ந்துவருங் குடிகளும் வீடொன்றுக்கு இரண்டு பத்திரிகை மூன்று பத்திரிகைத் தருவித்து வாசிக்கவும், அதிலடங்கியுள்ள வித்தையின் கருத்துகளையும், விவேகவிருத்திகளையும், ஈகையின் சுகங்களையும், சன்மார்க்க நடைகளையும் வாசித்து நாளுக்குநாள் அறிவின் விருத்தி உண்டாகி வித்தியாவிருத்தி, விவசாய விருத்தி, வியாபார விருத்தியில் ஊக்கமுற்று உழைத்து