பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/761

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் / 713
 

ஒருவகுப்பினராயிராது பல வகுப்பினராக ஏற்படுத்திக் கொண்டு ஒரு வகுப்பு பிராமணன் மற்றொரு வீட்டுப் பிராமணன் வீட்டிற்கு புசிப்பிற்கும் பெண் கொள்ளற்கும் ஏதுவில்லா இடங்களில் சாதி பேதத்தாலும் அவன் குறுக்குப்பூச்சுப் பாப்பான் நான்நெடுக்குப் பூச்சுப்பாப்பான், அவன் வடகலைப்பாப்பான், நான் தென்கலைப்பாப்பானென்னும் சமய பேதத்தாலும் ஒருவர் முகத்தை ஒருவர் கண்டவுடன் புத்தியின் விருத்தியற்று பொறாமெய் விருத்தியால் இருவரும் சுடுகாட்டு மூஞ்சுகளாகி விடுகின்றார்கள்.

இவ்வகையாக ஒருவகைப்பாப்பானைக்காணில் மற்றொரு பாப்பான் முகச்சுளிப்புண்டாகும் பலவகுப்புப்பார்ப்பார்தோன்றி பொறாமெவிருத்தியே நாளுக்குநாள் பெருகுமாயின் புத்தியின் விருத்தி எங்ஙனம் பெருகும். குடிமிவைத்து, நூல் போட்டுக் கொண்டு நான் பிராமணன் நான் பிராமணன் என்னும் வேஷமிட்டுக்கொள்வது மிக்க எளிதாய வித்தையாயுள்ளதாலும், சோம்பேறி சீவனத்திற்குச் சொந்தமாயுள்ளதாலும் பாப்பார் கூட்டம் பெருகி புத்தியினால் உண்டாம் வித்தைகள் கெடும் வழிகளைத் திறந்து விட்டார்கள்.

பார்ப்பார்களின் பல வகுப்புக்கள் தோன்றி சுடுகாட்டு மூஞ்சுகள் தோன்றுகிறதேயெனப் பரிதாபப்படினும் அவர்களையே குருவென்று பின்பற்றியுள்ள நாயுடு வகையாரேனும் முகமலர்ச்சியுடன் அன்பு பாராட்டி ஒருவரையொருவர் நேசித்துக் கொள்கின்றாரா என்று ஆராயுங்கால் தெலுகுமட்டும் பேசுவதொன்றுஅன்றி அவன்வளையல் விற்கும் நாயுடு, இவன் இடைய நாயுடு, உவன் நட்டுவநாடென்னும் பலவகைப்பிரிவுகளாக ஒருநாயுடுவின் வீட்டிற்கு மற்றொரு நாயுடுபுசிப்பதற்கு ஏகாமலும் பெண் முதற்கொள்ளாமலும் இருக்கின்றார்கள். அவ்வகை மீறிநாயுடுகள் தானே யென்றெண்ணி இடையநாயுடு வளையல் நாயுடுவீட்டிற்குப் போவானாயின் சுடுகாட்டுமூஞ்சி தோன்றுவதுடன் பொறாமெயும் பெருகி விடுகின்றது. இத்தகையப் பொறாமெவிருத்தியால் புத்தியின் விருத்திக்கு ஏதும் இல்லையென்றிரஞ்சி, முதலியார்கள் வகுப்பிலேனும் முகமலர்ச்சிக்கொண்டு ஒருவருக்கொருவர் அன்புபாராட்டி புத்தியைப்பெருக்கி, பொறாமெயை அகற்றியுள்ளாரா என்றாராயுங்கால், நான் கொண்டைகட்டி முதலி, அவன் தோட்டக்கார முதலி, இவன் அழும்பிடைய முதலி, உவன் நட்டுவ முதலி மற்றுங் கரையாரமுதலியென வகுத்துக்கொண்டு ஒருவர் வீட்டில் ஒருவர் புசியாமலும், பெண்கொள்ளாமலும் பிரிந்தேயிருப்பதுடன் ஏதோ பெண்கொள்ள புசிக்க வந்துவிடுவார்களாயின் சுடுகாட்டு மூஞ்சுகளாகி விடுவதுடன் பொறாமையைப் பெருக்கி புத்தியின் விருத்தியற்றே இருப்பதாக விளங்குகின்றது.

மற்றுமுள்ள செட்டிகளென்று பிரிந்துள்ளவர்களேனும் ஒருவருக்கொருவர் முகமலர்ச்சிகொண்டு அன்பு பாராட்டி புத்தியின் விருத்தியில் இருக்கின்றார்களா என்றாராயுங்கால், நான் நாட்டுக்கோட்டைச் செட்டி, அவன் கோமுட்டிச் செட்டி, இவன் ஊளைச் செட்டி, உவன் கரையாரச் செட்டிஎனப் பலவகையாகப்பிரிந்து கொண்டு சுடுகாட்டு மூஞ்சுகளாகவே விளங்குகின்றார்கள் இத்தகையான சாதி பேதத்தாலும் சமயபோதத்தாலும் ஒற்றுமெயற்றுப் பொறாமெவிருத்தியே மேற்கொண்டு ஒழுகுமாயின் புத்தியின்விருத்தி எங்ஙனம்பெருகும்.

இத்தகைய நூதன சாதிபேதத்தையும் சமய பேதத்தையும் தங்களுக்குத் தாங்களே உண்டு செய்துக்கொண்டு புத்தியின் விருத்தியற்றிருப்போர்களால் தங்களுக்கு எதிரடையாக சாதி பேதமில்லாமலும் சமயபேதமில்லாமலும் வாழ்வோர்களாகியப் பெருங்கூட்டத்தோரைப் பறையரென்றும் பஞ்சமரென்றுந் தாழ்த்தி தங்கள் வகுப்புக்குள் மாறுபட்டவர்களைக் கண்டவுடன் கால் சுடுகாட்டுமூஞ்சு, அரை சுடுகாட்டுமூஞ்சு, முக்கால் சுடுகாட்டு மூஞ்சு கொண்டுள்ளவர்கள் தங்களால் தாழ்த்தியுள்ளவர்களைக் கண்டவுடன் முழு சுடுகாட்டு மூஞ்சுகளாகிவிடுகின்றார்கள்.