பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/763

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமூகம் /715
 

கீர்த்தி பெறுவதுடன் தேசமக்களும் சுகச்சீர் பெறுவார்கள். இவ்வீகையின் செயலை தொடர்ந்து பழகற்கு பிரிட்டிஷ் ஆட்சியின் துரை மக்கட் செயல்களையே பின்பற்றிவருவதாயின் ஈகையின் பெயரும் அதன் செயலும் அதனாலடையும் பயனும் வெள்ளிடைமலைபோல் விளங்கும். இவற்றை ஆய்ந்துணராது பிரம்மா ஒருவனிருந்தானென்னில் அவன் இப்போது உள்ளானோ வென்னும் எதிர்வினாக் கடாவாது அதனையேற்பது இகழ்ச்சி, பிரம்மாமுகத்தில் ஒருவன் பிறந்தானென்னில் அவனிப்போது எம்முகத்தில் பிறக்கின்றானென்னும் எதிர்வினாக்கடாவாது அதனை ஏற்பது இகழ்ச்சி, அவை போல் ஏதொரு தொழிலுமற்று உலாவுந்தடிச் சோம்பேறிகளுக்கு மட்டிலும் அன்னமிட வேண்டும் என்றபோது அதனால் யாதுபயனென்னும் எதிர்வினாக் கடாவாது ஏற்பது இகழ்ச்சியாதலின் ஈகையின் செயலை ஆய்ந்து செய்வோர் இனிய சுகமடைவார்களென்பது திண்ணம். வித்தை, புத்தி, ஈகை மூன்றையும் ஆராய்ந்தோம், இனி சன்மார்க்கத்தை ஆராய்வோமாக.

- 7:7; சூலை 23, 1913 -

சன்மார்க்கம் என்பது நல்வழி என்னப்படும். அதாவது சகல விஷயங்களையும் நிதானித்துத் தனது காரியாதிகளை நடத்துவதில் தான் சுகமடையச்செய்யும் செயல்களில் ஏனையோரும் சுகமடையக்கருதி செய்தல் வேண்டும். அவ்வகை ஏனையோர் சுகத்தைக் கருதி செய்தலே தன் சுகத்திற்கு பின்னமின்றி எடுத்த காரியங்கைகூடும். தான் சுகமான புசிப்பைப் புசிக்குங்கால் ஏனையோரும் சுகபுசிப்பைப் புசிக்கவேண்டும் என்னும் அன்பை பெருக்கல் வேண்டும், தான் சுத்தமான உடையை அணியுங்கால் ஏனையோரும் சுத்த உடையை அணியவேண்டும் என்னும் அவாவை வளர்த்தல் வேண்டும். சருவசீவர்களுக்கும் ஓர் துன்பமணுகாமற் கார்த்து சீவகாருண்யத்தை நிலைபடுத்தல்வேண்டும். தான் கற்ற வித்தைகளை ஏனையோருக்குக் கற்பித்து அவர்களை சோம்பலின்றிய சூஸ்த்திரர்களாக்கவேண்டும். தாங்கள் கற்ற வியாபாரவிருத்தியை ஏனையோருக்குக் கற்பித்து வைசியர்களாக்கவேண்டும். தனக்குப் பத்துரூபா சம்பாதனைக் கிடைக்குமாயின் அதைக்கொண்டே போதுமான திருப்தியுடன் சீவியத்தைக் கார்த்துக்கொள்ளல் வேண்டும். மதுபான மென்னும் லாகிரியானது தனக்குக் கேட்டை உண்டு செய்யுமெனக் கண்டவுடன் ஏனையோரும் அதனைப் பருகுதலைத் தடுத்தல் வேண்டும். விபச்சாரத்தினால் உண்டாங் கேடுகளைக் கண்டு தடுப்பதுடன் ஏனையோர்களையும் அவ்வழி செல்லாமல் தடுத்தல் வேண்டும். களவினால் உண்டாம் கேடுகளையுந் துக்கவிருத்திகளையுங் கண்டு அவைகளைத் தடுப்பதுடன் ஏனையோர்களையும் அக்களவுசெயலில் செல்லவிடாமல் தடுத்தல் வேண்டும். பொய்யிலுண்டாங் கேடுகளை உணர்ந்து பொய் பேசுவதை அகற்றுவதுடன் ஏனையோரையும் பொய்பேசவிடாமல் தடுத்து காத்தல் வேண்டும். சீவராசிகளை வதைப்பதினால் அவைகள் படுந்துன்பங் கண்ணாரக் கண்டும் மனந்தளராது அவைகளின் மாமிஷங்களைப் புசித்தலை அகற்றுவதுடன் ஏனையோரையும் அத்தகைய சீவஹிம்சை செய்யாமலும் மாமிஷங்களைப் புசியாமலுந் தடுத்தல் வேண்டும். இத்தியாதி நல்வழிகளாம் சன்மார்க்கத்திற் பழகி மனிதனானவன் தேகசுத்தம், வாக்கு சுத்தம், மனோசுத்தமடைந்தவனே மேன்மகன் என்றும் உயர்ந்த சாதியினன் என்றும் தேவன் என்றும் கொண்டாடப்படுவான். இதுவே சன்மார்க்கமும் சன்மார்க்கத்திலடையும் பயனும் என்னப்படும்.

இச்சன்மார்க்கமே உலகவாழ்க்கையில் சுகத்தைத் தருவதுடன் நித்தியானந்தத்தைப் பெருக்கும் நிருவாணத்திற்குக் கொண்டுபோம் வழியாம்.

இவற்றிற்பழகாது, பொய்ச்சாதி பொய் மதங்களை ஏற்படுத்திக்கொண்டு மனிதனை மனிதனாகப் பாவிக்காது அவனைத்தாழ்த்தி மனங்குன்றச்செய்து சீவகாருண்யம் அற்றிருப்பது சன்மார்க்கத்திற்கு எதிரடையாய துன்மார்க்கம். ஒருகுடிபிழைக்க நூறு குடிகளைக் கெடுப்பது துன்மார்க்கம். மனதாரப் பொய்யைச்சொல்லி பொருள்பறிப்பது துன்மார்க்கம். தாங்களே ககம்பெற வேண்டும் ஏனையோர் சுகம்பெறலாகாதென்று முறுமுறுத்தல் துன்மார்க்கம்.