பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/770

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
722 / அயோத்திதாசர் சிந்தனைகள்
 

ஒருங்குசேர்த்து விருத்திசெய்துவந்த, வைத்திய மலை என்பதை நாளது வரையில் காணலாம். இந்திய தேச வைத்திய சிறப்பை அறிந்து அரேபிய தேசத்தோரும் சாலோமோன் முதலிய அரசர்களும் இவ்விடம் வந்து வைத்திய பாகங்களைக் கற்றுச் சென்றார்களென்பதை சரித்திரங்களிலுங் காணலாம். இந்தியதேச வைத்தியம் உலகெங்கும் சிறப்புற்றிருந்ததற்குக் காரணமியாதெனில் அறப்பள்ளிகளென்னும் பௌத்த வியாரங்களில் தங்கியிருந்த ஒவ்வோர் அறஹத்துக்களும் தங்கள் தங்கள் பேரறிவை கொண்டு பஞ்சபூமிகளின் இலட்சணங்களையும் அந்தந்த பூமிகளில் வாசஞ்செய்யும் மனுக்களுக்குத் தோன்றி வதைக்கும் நாலாயிரத்தி நானூற்றி நாற்பத்தியெட்டு வியாதிகளின் பிரிவுகளையும் அந்தந்த பூமிகளில் விளையும் மூலிகைகளின் சுப வசுபகுணங்களையும் பாஷாணங்களின் சுபவசுகங்களையும், உலோகங்களின் சுபவசுகங்களையும், உப்பினங்களின் சுபவசுகங்களையும், நவரத்தினங்களின் சுபவசுகங்களையும் கண்டு தெளிந்ததுடன் மூலிகைகளுடன் பாஷாணங்களைச் சேர்க்கும் வகைகளையும், பாஷாணங்களுடன் உலோகங்களைச் சேர்க்கும் வகைகளையும் உலோகங் களுடன் உப்பினங்களைச் சேர்க்கும் வகைகளையும் உப்பினங்களுடன் இரத்தினங்களைச் சேர்க்கும் வகைகளையுந் தேறக் கண்டறிந்து ஓடதிகளை முடிப்பதுடன் மனுமக்கள் தேக லட்சணங்களையும் வியாதியின் பிரிவுகளையும் தோன்றும் காரணங்களையும் அவைகளைத் தெரிந்து செய்வதற்கு நாடி பரிட்சை முகபரிட்சை நீர்க்குறி, மலக்குறி, விழிக்குறி, சுவாசக்குறிகளை அறிந்து அவுடதம் ஈவதற்கும் மிக்க யூகையும் அதிநுட்பத்தில் வியாதிகளை அறிந்து செய்துவந்த வைத்திய வல்லபத்தைக்கண்டு பல தேசத்தோரும் மதிக்கவும் இவ்விடம் வந்து கற்றுச் செல்லவும் நாளது வரையில் சகல தேசத்தோரும் வயித்திய பாகத்தை விருத்தி செய்து வருவதற்கு இந்திய வைத்தியமே மூலபீடமன்றி வேறொன்றில்லை என்பதே துணிபு. இத்தகைய வைத்திய சிறப்பானது இந்திய தேசம் எங்கணும் அறப்பள்ளிகளாம் புத்த வியாரங்கள் நிறைந்திருந்த வரையில் அறஹத்துக்களும் சமண முனிவர்களும் தங்கள் காலங்களை வீண் சோம்பலிலும் வஞ்சினத்திலும் பொய்யிலும் பொறாமெயிலும் போக்காது தங்கள் வித்தை விருத்தியையும் புத்தி விருத்தியையும் ஓடதிகளாம் அவுடத கிருத்தியிலே வளர்த்து மனுமக்களுக்கும் மற்றும் சீவராசிகளுக்கும் உபகாரிகளாகவே விளங்கி வந்தார்கள். அதிலும் அவர்கள் எழுதி வைத்துள்ள வைத்திய பாகங்களை வசனமாக எழுதிவைப்பதாயின் தங்கள் மாணாக்கர் மனதில் சரிவரப் பதியாதென்று எண்ணி செய்யுட்களாகவும் பாடல்களாலுமே எழுதிவைத்தார்கள். அவற்றுள் புத்தபிரானால் ஏற்படுத்திய வடமொழி, தென் மொழியிரண்டினுள் வைத்திய பாகத்தை வடமொழியில் பிரபலமாக எழுதாமல் தென்மொழியிலேயே பிரபலமாக எழுதி வைத்திருந்தார்கள். அவைகளுள் அகஸ்தியர் மூலிகை குணாகுணங்களையும் அதனுற்பவங்களையும் மிக்க ஆராய்ந்து மூலிகைகளுக்கு மட்டிலும் நிகண்டு பதினாயிரம் செய்யுள் பாடிவைத்திருக்கின்றார். வியாதிகளின் விபரங்களையும் மருந்துகள் முடிக்கும் பாகங்களையும் மனிதன் கடைத்தேறும் ஞான போக்குகளையும் செளமியசருகாமென்னும் ஏழாயிரஞ் செய்யுள் பாடி இருக்கின்றார். மற்று, சரக்குகளின் சத்துரு மித்துருக்களையும் கூட்டுவகைகளையும் ஆயிரம் ஐந்நூறு எழுநூறு முந்நூறு நாநூறென்னும் செய்யுட்களைப் பாடி வைத்ததுடன் தன்வந்திரி, திருமூலர், ரோமர், வாமதேவர் இராமதேவர், இடைக்காடர், கொங்கணர், போகர், புலிபாணி, மற்றுமுள்ள சமண முநிவர்கள் யாவரும் ஏழாயிரம், நாலாயிரம், மூவாயிரம், ஈராயிரம், ஓராயிரமாக வைத்தியபாகச் செய்யுட்களையே வரைந்து ஓலைச்சுவடிகளை கட்டுக்கட்டாக அறப்பள்ளிகளிலடுக்கி பின் சந்ததியோர் ஈடேறும் வழிகளுக்கு வைத்திருந்தார்கள். அக்கால் இந்நூதன சாதிவேஷக்காரர்கள் வந்து தோன்றி நூதன மதங்களை ஏற்படுத்திக் கொண்டு பொய்யைச் சொல்லி சாதிவேஷத்தைப் பெருக்கியும், பொய்யைச் சொல்லி மதக்கடைகளைப் பரப்பிப் பொருள் சம்பாதித்தும், பொய்யைச் சொல்லி ஆடு,மாடு குதிரைகளை நெருப்பிலிட்டு