பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசியல் / 51
 


சமயத்திற்குச் சமயம் மாறுதலடையும் தந்திரங்களையும் தாங்கள் வயிற்று சீவனத்திற்குப் போகும் இடங்களில் எல்லாம் சாதியாசாரங்கள் கிடையாது. மற்றவர்கள் வயிற்று சீவனத்திற்கு ஏகும் இடங்களில் எல்லாம் சாதியாசாரம் உண்டு என்றும் வகுத்துவைத்திருக்கும் சமயோசிதங்களையும் நன்காராய்ந்தறியாமல் தங்களை தாழ்ந்தசாதி என்று ஒடுக்கிக்கொண்டு இத்தேசத்திற்கு அன்னியப்பட்டவர்களும் அடியோடு குடிகெடுப்போர்களுமாகிய பராயர்களைப் பெரியசாதி என்று உயர்த்திக் கொண்டு வருமளவும் அவர்கள் தங்கள் சுயப்பிரயோசனத்திற்காய் செய்துவரும் சூதிலும் வஞ்சினத்திலும் குடிகெடுப்பிலும் பெரியசாதி என்னும் பெருமெயிலும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு இலிங்கத்தைக் கண்டால் பண்டாரம் என்றும் நாமத்தைக் கண்டால் தசரியென்றுங் கூறுவதுபோல் காரியாதிகளை நடத்தி தேசம் பாழானால் என்ன, தேசக்குடிகள் கெட்டால் என்ன, தேசஞ் சீரழிந்தால் என்ன என்னும் சுயப்பிரயோசன நோக்கத்திலிருக்கின்றார்கள்.

மற்றவர்களோ இவர்களின் நயவஞ்சகம் அறியாமல் விவேகமும் வித்தையும் அன்புமிகுத்த அரசாங்கத்தை சுட்டுக்குருவி பருந்தை எதிர்ப்பது போல் எதிர்த்து பாழடைகின்றார்கள்.

ஏனப்பா, பந்தயத்தில் தோற்றுப்போனீரே என்றால் இன்னும் போடும்பந்தயம் என்பது போல் வீராப்பிடுவதைவிட்டு நான்கு படி அரிசிவிற்கும் பஞ்சகாலமாயினும் நன்குநிலைத்து அரை வயிற்றுக் கஞ்சேனும் அன்பாய் புசித்து ஆறுதலடைந்து வருவது ஆங்கிலேயர் அரசாட்சியின் செயலா அன்றேல் சுதேசிகளென வெளி வந்துள்ள சுயப்பிரயோசனக்காரர் செயலா என்று ஆராய்வரேல் சகலசாதியோர் சுகசீவனங்கள் யாவும் ஆங்கில அரசாட்சியின் அன்பின் மிகுதியால் அடைந்துள்ளோம் என்று அறிந்து ஆனந்தக்கூத்தாடி அவர்கள் அரசாட்சியும் அவர்கள் சீவியமும் என்றும் வாழ்கவாழ்த்தி இதயங்குளிர நிற்பார்கள்.

இத்தகைய நன்றியை மறந்து சுதேசியம் என்னும் படாடம்பங் கொண்டு பூச்சிக் காட்டிவருவரேல் பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சாதென்னும் பழமொழிக்கிணங்க ஆங்கிலேயர்கள் இவ்வகைய வூளைமிரட்டுக்கும் புறட்டுக்கும் அஞ்சாமல் உள்ள சுகத்தையும் கெடுத்துப் பாழாக்கிவிடுவார்கள். அப்பாழும் அவர்கள் செய்வதன்று, சுதேசிகள் என்போர் செய்கைகளே இவர்களைப் பாழாக்கிவிடும் என்று அஞ்சுவதுடன் எதார்த்த சுதேசிகளையும் பாழாக்குமே என அஞ்சுகிறோம்.

- 1:50; மே 27, 1908 -

பிள்ளையார் முதுகைக் கிள்ளிவிட்டு நெய்வேத்தியங் கொடுப்பதுபோல் ஆங்கிலேயர் ஆயிரம் இரண்டாயிரஞ் சம்பளம் பெற்றுக் கொண்டு பஞ்சத்திற்குப் பரிந்து பாடுபடுகின்றார்கள் என்றும், இத்தேசத்தில் இரயில் வண்டிகள் ஓடுவது ஆங்கிலேயர்களுக்கே சுகமென்றும் இரண்டு பத்திரிகைகளில் வரைந்துள்ளதைக் கண்டு மிக்க விசனிக்கின்றோம். பிரிட்டிஷ் துரைத்தனத்திற்கு முன்பு எத்தேசத்திற் பஞ்சங்களுண்டாயதோ அத்தேசம் முழுவதும் பாழடைவது சுவாபம் என்பதை பத்திராதிபர்கள் அறியார் போலும். அங்ஙனம் அறிந்திருப்பார்களாயின் பஞ்சகாலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் படுங்கஷ்டங்களைப் பரிகசிக்கமாட்டார்கள்.

குதிக்கமாட்டாதவன் கூத்தைப் பழித்தான் பாடமாட்டாதவன் பாட்டைப் பழித்தான் என்னும் பழமொழிக்கிணங்க சாமிக்கதைச் சொல்லும்போதே சூத்திரன் கேட்கப்பட்டாதென விரட்டும் பாவிகள் சாப்பாடு போடும்போது யாருக்கிட்டு யாரை விலக்குவார்கள் என்பது தெரியாதோ. ஆடு நனையுதென்று ஓனாய் குந்தியழுவதுபோல் ஏழைகள் யாவரும் பஞ்சத்தால் பீடிக்கப்படுகிறார்கள் என்றுக் கூச்சலிடும் கனவான்கள் தங்கள் திரவியங்களைச் சிலவிட்டு பஞ்சத்தை நிவர்த்திப்பதுண்டோ இல்லையே. ஏழைகளைக் கார்க்க ஆங்கிலேயர்கள் ஏதேனும் உதவி செய்வார்களானால் அந்தத் துகையிலேயே லாபஞ் சம்பாதித்துத் தாங்கள் பெண்சாதி பிள்ளைகளைக் காப்பாற்றிக்