பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் பச்சையப்பர் கல்லூரி முன்னாள் தலைவர்

பேராசிரியர்: திரு. ம. சண்முக சுந்தரனார், எம். ஏ. எல். டி.

அவர்கள்

அணிந்துரை

'சங்ககாலச் சான்றோர்கள்' என்னும் தலைப்புக்கொண்ட இந்நூலில் திரு. ந. சஞ்சீவி அவர்கள், விருந்தினர்க்கு அறுசுவை அடிசில் சமைத்து அளிப்பது போல, பழந் தமிழ் நூல்களின் சுவைகளையெல்லாம் பிழிந்து தமிழருக்கு ஒர் இலக்கிய விருந்து அளித்துள்ளார். வீரமும் பரிவும், நேர்மையும் நெறியும், வள்ளன்மையும் தெளிவும் இக்கட்டுரைகளில் ஊறி வழிகின்றன. பழந்தமிழ்ப் புலவர்களும் அவர்கள் அறிவுரைகளைக் கேட்டு ஒழுகி அவர்களைப் பெருமைப்படுத்திய புரவலர்களும் இதில் கண் நிறைந்த காட்சியளிப்பதோடு, தங்கள் சுவை மிக்க செந்தமிழ்ப் பாடல்களால் செவிக்கின்பமும் ஊட்டி நம் உள்ளங்களை ஊக்குவிக்கின்றார்கள். அவர்களது வாழ்க்கை வரலாறுகளின் பல சீரிய பகுதிகள் இதில் இவ்வாசிரியருக்கே சிறப்பான உணர்ச்சியும் கவர்ச்சியும் மிக்க தோரணையில் ஒரு பேசும் படம் போல நம்முன் தோன்றுகின்றன. தமிழ் நாட்டுச் செந்தமிழ் மேடை வீரர்களிடையே தலையாயவர்களுள் ஒருவராக மதிக்கப் பெறும் ஆற்றலும் புகழும் தம் இளமையிலேயே பெற்றுள்ள திரு. சஞ்சீவியோடு சென்ற மூன்று ஆண்டுகள் இடைவிடாது பழகும் நல்வாய்ப்புப் பெற்ற எனக்கு, அவரது இனிய குரலும், ஆர்வமும் கற்பனையும் ததும்பும் பேச்சும் இந்நூலின் வரிகளுடே ஒலித்துக்கொண்டிருக்கின்றன