பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

சங்ககாலத் தமிழ் மக்கள்

லுக்குச் சென்று, இறைவனை வழிபட்டனர்’, என மாங்குடி மருதனார் கூறுகின்றார் [1] . திருப்பரங்குன்றத்தை அடைந்த மகளிர் முருகப் பெருமானது வழிபாட்டிற் கலந்து கொண்ட இயல்பினைச் சங்க நூலாகிய பரிபாடல் இனிது விளக்குகின்றது. 'யாம் எம் காதலரைக் கனவிலே மணந்தது பொய்யாகாமல், நனவின்கண் எம் திருமணத்தினை நிறைவேற்றியருளுக !’ என மணமாகாத மகளிர் முருகனை வேண்டிக் கொண்டனர்.மணஞ்செய்துகொண்ட மகளிர், ‘எம் வயிறு பிள்ளைப்பேறு வாய்ப்பதாகுக !’ எனவும், ‘எம் கணவர் செய்யும் செயல்கள் நன்கு நிறைவேறுக !’ எனவும், ‘எம் கணவர் போரில் வெற்றி பெறுவாராக !’ எனவும் வேண்டி நின்று முருகப் பெருமானை அன்புடன் வழிபட்டனர். மணந்துகொண்ட பெண்டிர் தம் கணவரது இனிய மகிழ்ச்சியுடன் கூடிய பேரன்பினைப் பெறுதல் கருதியும், மணமாகாத கன்னியர் அறிவு திரு ஆற்றல்களாற் குறைவற்ற மைந்தரை மணந்துகொள்ளுதல் கருதியும் இவ்வழிபாட்டிற் கலந்துகொண்டனர் எனப் பரிபாடலிற் புலவரொருவர் குறிப்பிடுகின்றார்.

மார்கழி மாதத்துத் திருவாதிரை நாளில் சிவபெருமானுக்குத் திருவிழா நடைபெற்றதெனவும், அவ்விழா முடிந்த பின்னர் மதுரை நகரத்து இளமகளிர், 'இவ்வுலகம் மழையாற் குளிர்வதாக!' எனத் தாயருகே நின்று கடவுளை வணங்கித் தைந்நீராடினர் எனவும் ஆசிரியர் நல்லந்துவனார் பரிபாடலிற் கூறுகின்றார். இத் தைந்நீராடல் மகளிர் மேற்கொள்ளுதற்குரிய தவச் செயல்களுள் ஒன்றாகக் கலித்தொகையிற் குறிக்கப்படுகின்றது [2]. மனைவியுடனும் தாய் தந்தையருடனும் பிள்ளைகளுடனும்

  1. மதுரைக் காஞ்சி
  2. கவி. 59.