பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெண்டிர் நிலை

95

சுற்றத்தாருடனுங்கூடித் தெய்வத்தை வழிபட வேண்டும்.’ எனப் பெரியோர் அறிவுறுத்தியபடி சங்க காலத் தமிழ் மக்கள் கடவுள் வழிபாட்டு முறையை அமைத்துக்கொண்டார்கள். அவ்வழிபாட்டில் நம்பிக்கையும் உறுதியுமுடையவர்களாய் முன்னின்று தம் கணவர்க்கும் புதல்வர் முதலியவர்க்கும் இன்றியமையாத தற்பொருள்களை வேண்டிப் பெறுதல் பெண்டிரது செயலாக அமைவதாயிற்று.

கணவர் உலகியற்கடமை நோக்கித் தம்மைப் பிரிந்து சென்ற காலத்து, அவருடைய பிரிவிற்கு வருந்தாது குறித்த நாளளவும் ஆற்றியிருந்து மனையறம் நிகழ்த்துதல் பெண்ணியல்பு எனப் பாராட்டப்படுவதாம். தம் கணவரையே உயிராகக் கருதும் ஒருமை மகளிர், சிறையின் வழுவாமல் தம்மைத் தாமே காத்துக்கொள்ளும் உறுதி புடையாராவர். இத்தகைய உறுதியால் உள்ளத் திண்மை பெற்ற கற்புடை நங்கையை மனைவியாகப் பெறுதலைக் காட்டிலும் ஒருவன் அடைதற்குரிய சிறந்த பேறு வேருென்றுமில்லையென ஆசிரியர் திருவள்ளுவர் வற்புறுத்துக் கூறுகின்றார்.[1]

கணவனை உணவு முதலியவற்றாற் பேணிக் காத்தலும், அவனது வருவாய்க்குத் தக்கபடி ஆரவாரமற்ற நிலையிற் குடும்பச் செலவினை அமைத்துக்கொள்ளுதலும், பெற்றது கொண்டு உள்ளத்திருந்தும் அமைதியினை உடையளாதலும், பெரியார்களையும் விருத்தினர்களையும் பேணிப் போற்றுதலும், தன் அறிவின் திறத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்திக்கொள்ளாமல் அமைந்து ஒழுகுதலும், தன் குடும்பத்திற்குப் புகழுண்டாக்குதலும் மனைவியின் மாண்புகளெனப் பாராட்டப்படும் நற்குண நற்செய்கைகளாகும்.


  1. 1. திருக்குறள், 54