பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

சங்ககால தமிழ் மக்கள்

கணவன் உண்ணுதலைக் கண்டு மகிழ்தலைக் காட்டிலும் மனைவிபொருத்தி பெறுதற்குரிய சிறந்த மகிழ்ச்சி வேறொன்றுமில்லை. தலைமகள் ஒருத்தி சுவை மிக்க புளிக் குழம்பினை அமைத்துத் தன் கணவனை உண்பித்த திறத்தினைக் குறுந்தொகைப் பாடலொன்றிற் (167) புலவர் நயம் பெற விளக்குகின்றார், தலைவனும் தலைவியும் மனையறம் நிகழ்த்தும் வீட்டிற்குச் சென்று வந்த செவிலித்தாய், தலை மகளது குடும்ப வாழ்க்கையின் சிறப்பினை நற்றாய்க்குக் கூறுவதாக அமைந்தது அச்செய்யுள். 'அடுக்களையில் அலுவல் மிகுதியால் நெகிழ்ந்த ஆடையினைத் தயிர் பிசைந்த கையினால் விரைந்து இறுகவுடுத்துக்கொண்டு, தாளிப்பின் குறும்புகை தன் கண்ணிற்படித்து மணங்கமழ நன்றாகத் துழாவிச் சமைத்த புளிக்குழம்பினைத் தன் கணவன் மிகவும் சுவையுடையதென்று விரும்பி உண்ணுதலைக் கண்டு தலைவியின் முகம் மகிழ்ச்சிக் குறிப்புடன் விளங்கியது,' என்பது அச்செய்யுளின் பொருளாகும்.

தமிழ் நாட்டு மகளிர் விருந்தினரை உபசரித்தலில் மிகவும் திறமுடையவராவர். தம்மிடம் உள்ள பொருள் மிகக் குறைவாயினும், வந்த விருந்தினர் பலர் என்று கருதாமல், எல்லாரையும் இன்முகத்துடன் உண்பிக்கும் இயல்பு அவர்கள்பால் அமைந்திருந்தது ; அதனால், குறைந்த செலவிலே நிறைந்த பயன்களை உண்டாக்கும் ஆற்றல் பெற்றவர்களாய் விளங்கினார்கள். உண்மைக் காதல் வயப்பட்ட மகளிர், தம் கணவர் தம்முடன் அளவளாவுதலில் தவிர்ந்தொழுகுவராயினும், அவர்களிடத்துத் தாம் கொண்ட அன்பில் ஒரு சிறிதும் குறைந்தொழுகுவாரல்லர். "சிறுபிள்ளைகள் தாங்கள் விளையாடுதற்குரிய சிறு வண்டியினே ஏறிச் செலுத்த முடியாவிட்டாலும், இழுத்து