பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்டிர் நிலை

101

துக் காத்தனர். எல்லாப் பண்புகளும் நிரம்பப் பெற்றுச் சால்புடைய பெரு வீரர்களாய் விளங்குதற்குரிய நல்லுணர்ச்சியினைத் தமிழ் மக்களுக்கு ஊட்டிய பெருமை தமிழ் நாட்டுப் பெண்பாலார்க்கே சிறப்பாக உரியதாகும்.

வீரக்குடியிற் பிறந்த மகளிர் 'மூதின் மகளிர்' எனப் போற்றப் பெறுவர். இவர் தம் இயல்பினைப் புறநானூற்றுச் செய்யுளால் நன்குணரலாம்.

'நரம்புகள் எழுந்து தசையுலர்ந்த உடம்பினை உடைய முதுமகளொருத்தி, தன் மகன் போர்க்களத்தில் முதுகிற் புண்பட்டுத் தோற்றான் என்று சிலர் தவறாகக் கூறியதனைக் கேட்டாள். 'போரிலே என் மகன் புறமுதுகிட்டிருப்பானானால், அவனுக்குப் பாலூட்டிய என் மார்பினை அறுத்திடுவேன்! எனச் சினங்கொண்டு போர்க் களத்திற்குச்சென்று, அங்குள்ள பிணக்குவியலில் தன் மகன் உடம்பைத் தேடினாள். மார்பிற்புண்பட்டுச் சிதைந்த மகனுடம்பைக் கண்டு, அவனே சான்றோன் எனவுணர்ந்து, அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் பெருமகிழ்ச்சி அடைந்தாள்,' என்று காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் கூறுகின்றார்.

மறக்குடியிற்பிறந்த மற்றொரு பெண், முதல் நாட் போரில் தன் தமையனும், அடுத்த நாட்போரில் தன் கணவனும் இறந்த நிலையில் தன் குடிக்கு ஒருவனாயுள்ள இளஞ்சிறுவனை வேல் கைக்கொடுத்துப் போர்க்களத்திற்கனுப்பினாள் என ஒக்கூர் மாசாத்தியரர் கூறுகின்றார். மூதின்மகளிராகிய இவர்களுடைய வீரச் செயல்கள் தமிழ் மக்களின் மறவுணர்ச்சியினை வெளிப்படுத்துவனவாம்.

நாட்டில் அடிக்கடி போர் நிகழ்ந்தமையால், ஆடவர் தொகை சுருங்கி மகளிர் எண்ணிக்கை பெருகுவதாயிற்று.