பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

சங்ககாலத் தமிழ் மக்கள்

அதனால், மணந்துகொள்ளும் வாய்ப்பில்லாத மகளிர் ஆடலும் பாடலும் அழகும் என்ற மூன்றிலும் குறைவின்றி மாந்தர் மனத்தைப் பிணிக்கும் இசை நாடகம் ஒவியம் முதலிய அழகுக் கலைகளிற் பொழுது போக்குவாராயினர். உள்ளத்திற்கு உவகையளிக்கும் அறுபத்து நான்கு கலைகளையும் நன்கு கற்றுத் துறை போகிய இவர்கள், ஒருவனுக்கே உரிமை பூண்டொழுகும் திறமின்றிப் பொது மக்கள் எல்லாரையும் இன்புறுத்தும் அழகுக் கலைகளை வளர்த்து வந்தார்கள்; ஆதலால், "எண்ணெண் கலையோர்"[1] எனப் பாராட்டப் பெற்றார்கள். ஒருவனுக்கே உரியராய் வாழும் நியதியின்றி, அயலாராகப் பழகுதலின், இவர்கள் 'பரத்தையர்' என வழங்கப் பெற்றனர். இவர்கள் ஒருவனுக்கே உரிமை பூண்டு மனையறக் கடமைகளை நன்கு நிகழ்த்தி வாழ்தலும் உண்டு. கோவலனுடைய காதற்கிழத்தி மாதவியின் நிறையுடைமை இவண் நினைக்கத் தகுவதாம்.


  1. 1. சிலப்-ஊர்காண்-167.