தமிழர் கல்வி நிலை
கல்வியென்பது மக்கள் அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய மனப் பயிற்சியாகும். உட்கருவியாகிய மனமும் கண் முதலிய புறக் கருவிகளும் ஒன்றி நின்று இவ்வுலகியற் பொருள்களை நோக்கியுணரும் இப்பயிற்சி முறையினாலேயே மக்களது அறிவு வளர்ச்சியடைகின்றது.
கல்வி வளர்ச்சிக்கு மொழியின் துணையே இன்றியமையாததாகும். மக்கள் தாங்கள் எண்ணிய கருத்துக்களை மற்றவர்களுக்கு விளங்கச் சொல்லுதற்கும், பிறர் எண்ணங்களைத் தாங்கள் கேட்டறிதற்கும் அவர்களாற் பேசப்படும் தாய்மொழியே இடை நின்று துணை செய்வதாம். ஆகவே, தமிழ் முன்னோர்களால் கல்வியெனக் குறிக்கப்பட்டது, அவர்தம் தாய்மொழி வழியாகப் பயிலும் தமிழ்க் கல்வியே என்பது புலனாம்.
மக்களுடைய புலமைச் செல்வத்தின் குன்றாத நிலைக் களமாய் விளங்குவது அவர்கள் பேசும் மொழியேயாகும். அதன் உதவியினாலேயே அவர்தம் கல்வி உருவாகின்றது. மொழியின் துணையின்றிக் கல்வியை வளர்த்தல் என்பது இயலாத செயலாம். இவ்வுண்மையை நன்குணர்ந்த தமிழ் முன்னோர், தம் தாய் மொழியாகிய தமிழைக் கல்விப் பயிற்சிக்குரிய திறமுடையதாக அமைத்துக்கொண்டனர்.
உலகியற்பொருள்களின் இயல்பினை உள்ளவாறு விளக்குதற்குரிய சொல்லமைப்பினையுடையது 'இயற்றமிழ்' எனப்படும். மக்கள் மனத்தில் அமைந்து கிடந்த எண்ணங்களை உருவாக்கிச் செயற்படுத்தற்குரிய இயல்பினை வெளிப்படுத்தும் திறம் இயற்றமிழுக்குரியதாகும். தாம் சொல்லக் கருதிய கருத்துக்களைக் கேட்பார் உள்ளம்