பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகம்

5



என வழங்கினார்கள். கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தலாகும். நெய்தல் என்னும் கொடி நிறையவுளதாதல் பற்றி இந்நிலப்பகுதிக்கு நெய்தல் என்னும் பெயர் வழங்குவதாயிற்று

மலைகளில் விலங்குகளை வேட்டையாடித் தினை முதலியன விதைத்து வாழ்ந்தவர்கள் குறிஞ்சி நில மக்கள். இவர்கள் குறவர் என வழங்கப்பெறுவார்கள். காடு அடர்ந்த நிலப்பகுதிகளிற் பசுநிரைகளை மேய்த்து வரகு முதலிய புன்புலப் பயிர் செய்து வாழ்ந்தவர்கள் முல்லை நிலமக்கள். இவர்களை ஆயர் என வழங்குதல் மரபு. காடு கெடுத்து நாடாக்கிக் குளத்தொட்டு வளம் பெருக்கி நிலந்திருத்தி நீர் பாய்ச்சி நெல் முதலிய நன்செய்ப்பயிர்களை விளைவித்து, அரசியலமைத்து வாழ்ந்தவர்கள் மருத நிலமக்கள். இவர்கள் உழவர் என வழங்கப்பெறுவார்கள். கடலோரத்திலே குடிலமைத்துக்கொண்டு கடலிற் படகுகளைச் செலுத்தி வலை வீசி மீன் பிடித்து, உப்பு விளைவித்து விலைப்படுத்தி வாழ்தலையே தொழிலாகக் கொண்டவர்கள் நெய்தல் நிலமக்கள். இவர்கள் பரதவர் என வழங்கப்பெறுவார்கள்

மேற்கூறிய நான்கு நிலங்களின் வேறாகப் பேசப்படும் நிலப்பகுதி, நீரும் நிழலும் அற்ற பாலையாகும். எல்லாப் பருவத்திலும் பாலையாகவே விளங்கும் நிலப் பகுதி தமிழகத்தில் இல்லை. ஆதலால், பாலை நிலம் எனத் தனியே ஒரு பிரிவினைப் பண்டைத் தமிழர் வகுத்துக் கொள்ளவில்லை. வேனிற்காலத்து நண்பகற்பொழுதில் ஞாயிற்றின் வெப்பத்தால் ஒருவரும் நடத்தற்கியலாதபடி காய்ந்து வெதும்பிய வழியே ‘சுரம்' என்னும் பெயரால் தமிழிலக்கியங்களில் வழங்கப்படுகின்றது. தமிழ்மக்கள்