பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

சங்ககாலத் தமிழ் மக்கள்

 மகிழ இனிய ஓசையோடு கூடிய இசைத் திறத்தாற் புலப் படுத்தும் மொழிநடை 'இசைத் தமிழ்' ஆகும். தன் எண்ணங்கள் தம் உடம்பிற் காணப்படும் மெய்ப்பாடு முதலியவற்றால் வெளிப்பட்டுத் தோன்ற நடித்துக் காட்டுதற்கு அமைந்த மொழி நடை, 'நாடகத் தமிழ்’ என வழங்கப்படும். எப்பொருளையும் தெளிவாக எண்ணியறியும் உள்ளத்தின் இயல்பினை வளர்த்தற்குரிய மொழியமைப்பினை இயற்றமிழ் என்றும், கேட்பார் உள்ளத்தினைக் குளிரச் செய்யும் இன்னோசை மிக்க உரையின் இயல்பினை இசைத் தமிழ் என்றும், மக்கள்சொல்வன் அவர்கள் உடலிற்றோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படும் முறையில் அமைந்த மொழிநடையினை நாடகத் தமிழ் என்றும் மிகப் பழைய காலத்திலேயே நம் தமிழ் முன்னோர் வகுத்துள்ளனர். மக்கள் தங்கள் உடம்பின் செயலால் விளங்கிக் கொண்டவற்றை உரையினால் அறிவுறுத்தவும், உரையினால் அறிவித்தவற்றை உள்ளத்தால் உய்த்துணரவும் துணை செய்யும் கருவியாகத் தமிழ் மொழி அமைந்தமையால், அதனை முத்தமிழ் என்ற பெயரால் முன்னையோர் குறிப்பிடுவாராயினர்.

மக்கள் தங்கள் மனப் பயிற்சியின் பயனாக உணர்ந்து கொண்ட இயல்புகளை ஒர் ஒழுங்கு முறையிலே வைத்து ஏனையோர்க்கு எடுத்துரைப்பதே கல்விப் பயிற்சிக்குரிய நூலாகும். அறிய வேண்டுவனவற்றை அறிவிக்கும் கருவி, 'நூல்’ எனப்படும். நுண்ணிய பஞ்சின் நுனிகளால் ஒரிழைப்படுத்தி நூற்கும் நூலைப்போன்று, ஆழ்ந்தகன்ற பொருளுடைய சொற்களால் முறைப்பட இயற்றப்பட்டதே 'நூல்' எனச் சிறப்பிக்கப்படும். முறைப்பட இயற்றப் பெற்றமை கருதி அதனை 'முறை' என்ற பெயரால் வழங்குதலும் உண்டு.