பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் கல்லி நிலை

107

எனத் தமிழ்ச் சான்றோர் கருதினர், அறிவில்லாதார் இவ்விரு திறக் கல்வியையும் எண் என்றும் எழுத்தென்றும் கூறித் தமக்குப் புறம்பாகக் கருதி வந்தாலும், அறிந்தவர் இவ்விரண்டனையும் சிறப்புடைய உயிர்களுக்குக் கண்கள் என்றே அறிவுறுத்தி வந்தனர்.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு.”

என்ற திருக்குறளாலும் (392) அதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையாலும் இவ்வுண்மை புலனாம்.

கல்லாதார் முகத்திற் கண்ணுடையராயினும், உலகியற்பொருள்களின் இயல்பினை உள்ளவாறுணரும் ஞானக் கண்ணைப் பெறாமையால், அவர்தம் முகத்திலுள்ள கண்கள் புண்களாகவே இழித்துரைக்கப்பட்டன.

கற்கப்படும் நூல்களைப் பழுதறக் கற்று, கற்றபடி நன்னெறிக்கண் ஒழுகுதல் வேண்டுமெனவும், தோண்டத் தோண்டக் கிணற்றில் நீர் ஊறுவது போல, நூல்களை மேலும் மேலும் கற்றலால் அறிவு பெருகும் எனவும், அழிவில்லாத செல்வம் கல்வியே எனவும், தாம் கற்ற கல்வி தமக்கேயன்றி, உலகத்தார்க்கும் இன்பந் தருவதனைக் கண்டு, கற்றோர் மேலும் அக்கல்வியினையே விரும்புவர் எனவும், கற்றவனுக்குத் தன்னாடும் தன்னூருமேயன்றி எந்நாடும் எவ்வூரும் தன்னாடும் தன்னூருமேயாகும். எனவும், ஒருபிறப்பிலே கற்றகல்வி ஒருவர்க்கு எழுபிறப்பிலும் உயிரோடு சென்று உதவும் இயல்புடையதாதலால், அக் கல்வியை ஒருவன் இறக்குமளவும் கற்றல் வேண்டுமெனவும் ஆசிரியர் திருவள்ளுவனார் அறிவுறுத்துகின்றார்.

திருக்குறளிலுள்ள கல்வி, கல்லாமை, கேள்வி, அறி வுடைமை, சொல் வன்மை என்னும் ஐந்ததிகாரங்களும்