பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

சங்ககாலத் தமிழ் மக்கள்

கல்விப் பயிற்சியின் முறையினையே இனிது விளக்குவனவாம். கல்வியின் முடிந்த எல்லையாக ஆசிரியரால் அறிவுறுத்தப் பெறுவது, 'மெய்யுணர்தல்' என்னும் அதிகாரமாகும். துறவறவியலிற் கூறப்பட்ட இவ்வதிகாரம், தமிழ் மக்களின் சமய நூற்பயிற்சியினை நன்கு தெளிவிப்பதாகும்.

தமிழ் மக்கள் இவ்வுலகியற் பொருள்களை முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூவகையாகப் பகுத்து ஆராய்ந்தார்கள். அவற்றுள் முதற்பொருள் எனப்படுவன, இடமும் காலமுமாம். இவையிரண்டன் சார்பாகத் தோன்றும் புல் மரம் முதலிய நிலையியற் பொருள்களும், பறவை விலங்கு முதலிய இயங்கியற் பொருள்களும், உணவு தொழில் முதலியனவும் கருப் பொருள்களாம். இவை யாவும் நிலமும் காலமுமாகிய முதற்பொருளின் கண்ணே கருக்கொண்டு தோற்றுவனவாதலால், கருப்பொருள்களென வழங்கப் பெற்றன மக்களுக்குரிய அகமும் புறமுமாகிய ஒழுகலாறுகள், உரிப்பொருள் என வழங்கப் பெற்றன.

உலகியற் பொருள்களையெல்லாம் முதல், கரு, உரி என மூன்று திறமாகப் பகுத்துக் கொண்டு தமிழ் மக்கள் கண்டறிந்த நுட்பங்கள் யாவும் அவர்களது கல்விப் பயிற்சியை மிகுதிப்படுத்தின. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும்பூதங்களால் ஆகியதே இவ்வுலகம் என்னும் உண்மையினைப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே நம் தமிழ் முன்னோர் உணர்ந்து வெளியிட்டுள்ளனர்.

இவ்வுலகனத்தினையும், இதனைச் சூழ்ந்த வெளியாகிய வானத்தின் இயல்பினையும், வானத்தில் இயங்கும் ஒளிப் பொருள்களாகிய ஞாயிறு திங்கள் முதலியவற்றையும் ஆராய்ந்துணரும் ஆராய்ச்சியில் தமிழ் மக்கள் மிகப் பழைய