பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் கல்வி நிலை

109

காலத்திலேயே ஈடுபட்டு உழைத்துள்ளார்கள். அவ்வுழைப்பின் பயனாக அவர்கள் கண்டுணர்ந்து வெளியிட்ட உண்மைகள் பலவாகும். அவர்கள் பூதநூல் ஆராய்ச்சி பற்றி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே அறிவுறுத்திய உண்மைகளிற் சில இப்பொழுது கிடைத்துள்ள சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. தொன்மைக் காலத்திலேயே தமிழ் மக்கள் கண்டுணர்த்திய முடிவுகள் இக்காலத்துப் பல்வேறு கருவிகளின் துணை கொண்டு மேனாட்டார் கண்டுணர்த்திய முடிவுகளுடன் பெரிதும் ஒத்திருக்கக் காண்கின்றோம்.

ஞாயிறாகிய அனற்பிழம்பிலிருந்து தெறித்து விழுந்த ஒரு சிறு உருண்டையே உலகமென்றும், இந்நிலத்தினின்றும் தெறித்துச் சென்ற மற்றோர் உருண்டையே சந்திரனென்றும், ஞாயிற்றினின்றும் தெறித்து விழுந்த பூமி அதனது கவர்ச்சியால் இழுக்கப்பட்டு ஞாயிற்றைச் சுற்றிவருகிறதென்றும், அவ்வாறே பூமியிலிருந்து சிதறிய மற்றோர் உருண்டையாகிய சந்திரன் ஞாயிற்றையும் தனக்குப் பிறப்பிடமாகிய பூமியையும் ஒருங்கு சுற்றி வருகிறதென்றும் இக்கால ஆராய்ச்சியாளர் கூறுவர். விசும்பில் மேன்மேற்சென்று பார்க்குங்கால், அங்குக் காற்றின் இயக்கம் குறைந்துள்ள தென்பதும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் காற்று அறவே இயங்குவதில்லை என்பதும் இக்காலத்தார் கண்ட ஆராய்ச்சியினால் உறுதி செய்யப் பெற்ற உண்மைகளாகும்.

இவ்வுண்மையினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தங்கள் நுண்ணுணர்வால் அறிந்து வெளிப்படுத்திய பேரறிஞர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தார்கள். அப்பேரறிஞர்களின் கல்வித்திறத்தை நேரிற்கண்டு வியந்த