பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் கல்வி நிலை

115

 மேலும் மேலும் உண்டாக்குதலிலும், அத்துறைகளிற் கிடைத்த பொருள்களை ஒரு வழித் தொகுத்தலிலும், அம் முதற்பொருள் அழியாது மேன்மேல் வளரக்கூடிய நிலையிற் பாதுகாத்தலிலும், அவ்வாறு காக்கப்பெற்ற பொருள்களை நாட்டு மக்களின் நலங்கருதி அறம் பொருள் இன்பங்களின் பொருட்டுச் செலவழித்தலிலும் வல்லவனே அரசனாவன்', என்பது திருவள்ளுவர் அறிவுறுத்திய பொருளுரையாகும். இப்பொருளுரையினைச் சிறிது ஊன்றி நோக்குவோமானல், சங்ககாலத்தில் பொருளாதார வாழ்வினைச் செம்மைப்படுத்தும் நூல்கள் பல வழங்கினமை நன்கு புலனாம். பொருளாதார நூல் அக்காலத்துப் 'பொருள் புரிநூல்' என்ற பெயரால் வழங்கப் பெற்றது. நாட்டில் உள்ள பொருள், சகடக்கால் போல யாவர்கண்ணும் சென்று பயன் தரும் ஆற்றலுடையதாகும். அப்பொருளின் வளர்ச்சியினை உணர்ந்த அறிஞர்கள் அதனை முதலாகக் கொண்டு ஏதாவதொரு தொழிலைச் செய்து ஊதியம் பெருக்குவதில் கருத்தைச் செலுத்தினார்கள். 'முதற்பொருளைப் பெற்றார்க்கே ஊதியம் உண்டு ; முதலில்லார்க்கு ஊதியம் இல்லை’ என்றார் திருவள்ளுவர். தம்பால் உள்ள பொருளைப் பொன்னிலும் மணியிலும் ஆகிய அணிகலங்களுக்குச் செலவிடுவோர், அப்பொருளின் ஆற்றலையுணராது அதனே முடக்கி நோய் செய்பவராவர். இந்நுட்பத்தினைச் சங்ககாலத்துப் பொதுமக்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். 'ஆயர்குலப் பெண்ணொருத்தி தான் மோர் விற்றதனால் வாங்கிய நெல் முதலிய உணவுப் பொருள்களைக் கொண்டு தன் சுற்றத்தாரெல்லாரையும் பாதுகாத்துப் பின்பு தான் நெய்யை விற்கின்ற விலைப் பொருளுக்குக் கட்டியாகப் பொன்னை வாங்கிக் கொள்ளாமல், தான் செய்யும் பால் மோர் வாணிகத்தை மேலும் பெருக்குதற்-