பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

சங்ககாலத் தமிழ் மக்கள்

அக்காலத் தமிழர் நன்கு துணிந்தனர். அவர்கள் சொல்வன்மையினை வளர்த்தற்குப் பயன்பட்டது 'உரைநூல்' என்பதாகும். வழக்கியல் நூல் சங்ககாலத் தமிழ் மகளிர்க்குப் பயிற்றப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்திலமைந்த அறங் கூறவையத்திலே இவ்வுரை நூல்வழங்கப் பெற்றதெனவும் இவ்வுரை நூல் நெறிக்கு மாறுபடப் பேசுதல் ஆகாதெனவும் இளங்கோவடிகள் கூறுகின்றார்.

ஒவியம் எழுதும் முறையினைக் கற்பிக்கும் ஒவிய நூலும், மனை முதலியன அமைக்கும் சிற்ப நூலும், மக்களுடைய உடம்பிலுள்ள நோயினைத் தீர்க்கும் மருத்துவ நூலும், இவ்வாறே வேறு பல நுண்கலைகளை அறிவிக்கும் நூல்களும் சங்க காலத்தில் வழங்கின. ஆசிரியர் திருவள்ளுவனார் 'மருந்து' என்ற அதிகாரத்தில் அறிவுறுத்திய உண்மைகளே ஆராயுமிடத்து அவர் காலத்தில் உடம்பின் அமைதியினை உள்ளவாறு விளக்கிய உடல் நூலும், உடலிலுள்ள நோய்களைத் தீர்த்தற்குரிய மருத்துவ முறையினை விளக்கும் மருத்துவ நூலும் வழங்கியிருத்தல் வேண்டுமெனத் தெளிதல் எளிதாம். 'நல்லொழுக்கத்தால் திருத்தமாகப் போற்றி வரப்பட்ட உடம்பில் மருத்துவன் கொடுத்த மருந்து விரைவிற் சென்று சேர்ந்து நல்ல பயனைத் தரும், எனப் பெருங்கடுங்கோ என்னும் புலவர் கூறுகின்றார், (பாலைக்கலி, 16) இதனால், உடம்பின் கூறுபாடுணர்ந்து மருந்து செய்யும் முறை சங்ககாலத்தில் வழங்கியது புலப்படும்.

இதுகாறும் கூறியவற்றால் எண்ணும் எழுத்துமாகிய இரு வகையிலடங்கும் பல்வேறு கல்வித் துறைகளைப் பற்றிய தமிழ் நூற்களும் சங்ககாலத்து வழங்கினமை ஒருவாறு தெளிந்துகொள்ளலாம்.