பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

சங்ககாலத் தமிழ் மக்கள்

தமிழாகும். இசைக் கலையைப் பிறழாத நிலையில் வளர்ப்பன, குழல் யாழ் முதலிய இசைக் கருவிகளே. மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்றுப் புகுந்து இயங்க, அத்துளைகளிலிருந்து உண்டாகிய இன்னோசையினை மிகப் பழைய காலத்திலே கண்டு கேட்டுணர்ந்த தமிழ் முன்னோர், தம் உணர்வின் திறத்தால் முதன் முதல் அமைத்துக்கொண்ட இசைக் கருவி குழலாகும். வில்லின் கண்ணே வலிந்து கட்டப்பட்ட நாணோசையின் இனிமையை உணர்ந்து குமிழங்கொம்பில் மரல் நாரால் தொடுத்துக் கட்டப்பெற்ற பலவிற்களை ஒன்றாகச் சேர்த்து அமைத்துக் கொண்ட பழைய இசைக் கருவி வில் யாழ் என்பதாகும். வரையறுக்க முடியாத தொன்மைக் காலத்திலே அமைந்த இவ்வில் யாழினை அடிப்படையாகக் கொண்டே 'செம்முறைக் கேள்வி' யென்னும் 'சகோட யாழ்' முதலாக ஆயிர நரம்புடைய 'பெருங்கலம்' என்னும் 'பேரியாழ்' ஈறாகவுள்ள சிறந்த இசைக் கருவிகளெல்லாம் உய்த்துணர்ந்து அமைத்துக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு சுரத்திற்கும் தனித்தனி நாம்பு கட்டப் பெற்றது. தமிழர் கண்ட யாழ்க் கருவியாகும். ஒரு நரம்பிலே பல சுரங்களையும் வாசித்தற்கமைந்தது பிற்காலத்து வீணைக் கருவியாகும். இவ் வீணைக் கருவி ஒரே முறையில் தொடர்ந்து செல்லும் தொடரிசையினை மட்டுமே வாசித்தற்குரியது. தமிழரது யாழ்க் கருவியோ, தொடரிசையுடன் பலரும் சேர்ந்து பாடும பண்ணாகிய ஒத்திசையினையும் வாசித்தற்கு ஏற்புடையதாகும். தொடரிசையினை மட்டும் வாசித்தற்குரிய வீணைக் கருவியைக் காட்டிலும், தொடரிசையினையும் ஒத்திசையினையும் ஒரு சேர வாசித்தற்கமைந்த யாழ்க்கருவி பெரிதும் சிறப்புடையதென்பது சொல்லாமலே விளங்கும். அக்காலத்து யாழுக்கு நரம்பு கட்டுதல் வழக்கம். நரம்பு