பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கல்வி நிலை

121

வெயில், மழை முதலியவற்றால் ஏற்படும் நெகிழ்ச்சி, இறுக்கம் காரணமாக இசை வேறுபடும் நீர்மையது, பண்டைத் தமிழர் குழலோசையின் துணை கொண்டே யாழ் நரம்புக்கு இசை கூட்டினர். குழல், யாழ் என்பன தனித் தமிழ்ச் சொற்களாம்.

தமிழ் மக்கள் குழலும், யாழுமாகிய இசைக் கருவிகளின் துணை கொண்டு பல்வேறு இசை நுட்பங்களை வெளியிட்டுள்ளார்கள் என்பது முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தினாலும், அதன் உரைகளாலும் நன்கு துணியப்படும். இடைக் காலத்தில் வழக்கற்று மறைந்த யாழ்க்கருவியின் இயல்பும், அதன் கண் இசைக்கப் பெற்ற பன்னிரு பாலைகளின் பயனும், குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் என்னும் நாற்பெரும்பண்களின் இயல்பும், அவற்றின் வழி அமைந்த நூற்று மூன்று பண்களின் திறனும் ஆகிய இசை நுட்பங்களை, இக்காலத்திலும் பயன்படுத்தி மகிழும் வண்ணம் சேர முனிவராகிய இளங்கோவடிகள் அறிவுறுத்திய திறத்தினை அருண்மிகு விபுலாநந்த அடிகளார் தாம் இயற்றிய இசைத் தமிழ் நூலாகிய யாழ்நூலில் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்கள். உலக இசைகள் எல்லாவற்றிற்கும் பழந்தமிழிசையே அடிப்படையாய் அமைந்த உண்மையினை யாழ்நூலிற் கண்டு தெளிதல் தமிழறிஞர் கடனாகும்.

ஒன்றோடொன்று தொடர்பில்லாத தனித் தனி வரலாற்று நிகழ்ச்சிகளை நடித்துக் காட்டுதல் ‘கூத்து’ என வழங்கப்படும். இறைவன், முருகன், மாயோன், கொற்றவை முதலிய தெய்வங்களின் வீரச் செயல்களை விளக்கிக் காட்டும் பதினோராடல்கள் கூத்து என்னும் இவ்வகையைச் சேர்ந்தனவாம். பதினோராடலின் இயல்பு சிலப்பதிகாரத்-