பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

சங்ககாலத் தமிழ் மக்கள்

தில் விளக்கப்பட்டது. இத்தகைய கூத்தின் இயல்பினை விளக்கிய நூல் 'கூத்தநூல்' என வழங்கப்பெறும்.

மக்கள் ஒருவரைப் போன்று ஒருவர் ஒத்து நடித்தல் 'பொருநுதல்' என்ற சொல்லால் குறிக்கப்படும். இத் தொழிலில் வல்ல ஆட்டவர் ‘பொருநர் ' என வழங்கப்பெற்றனர். மகளிர் நம் உள்ளக்குறிப்பு உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் புலப்படும்படி சுவைபட நடித்தல் ‘நாட்டியம்' என வழங்கப்பெற்றது, இதற்கு வேண்டும் ஆடல், பாடல், அழகு என்பவற்றை விளக்கி உரைக்கும் நூல் ‘ நாட்டிய நன்னூல்' என இளங்கோவடிகளாற் குறிக்கப் படுகின்றது, மாதவி சோழமன்னன் பேரவையில் ஆடிய ஆடற்கலைகள் யாவும் நாட்டியான்னூலை நன்கு கடைப் பிடித்துக் காட்டியனவாகுமென்று இளங்கோவடிகள் கூறுகின்றார். உள்ளதும் இல்லதுமாகிய ஏதாவதொரு கதை இலைத் தழுவி நடிக்கப் பெறுவது ' நாடகம்' என வழங்கப்படும். உரையும் பாட்டுமாய் அமைந்து நடித்தற்குப் பயன்படும் முறையிலுள்ள காப்பியம் 'நாடகக் காப்பியம்' எனக் குறிக்கப்பட்டது.

ஆடலைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியன் இயல்பும், இசையாசிரியன் இயல்பும், நாடகத்திற்கும் இசைக்கும் வேண்டிய இசைப்பாடல்களை இயற்றித் தரும் கவிஞன் இயல்பும், இசையினை வரம்பு பெற நிறுத்த வல்ல தண்ணுமை (மத்தள) ஆசிரியன் தொழிற்றிறனும், குழலிசைப்பான் அமைதியும், யாழாசிரியன் இயல்பும், நாடக அரங்கின் இலக்கணமும், அரங்கிலே புகுந்து ஆடுகின்ற முறையும், பிற நுட்பங்களும் சிலப்பதிகார அரங்கேற்று காதையிலே தெளிவாக விளக்கப்பெற்றுள்ளன. இக்குறிப்புக்களையெல்லாம் நோக்கும் பொழுது சங்க