பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகம்

7


மாகும். கடற்பரப்பிலே கட்டு மரங்களையும் படகுகளையும் செலுத்திச் சென்று மீன்களைப் பிடித்து அவற்றை உணவாகப் பயன்படுத்தி, உப்பினை விளைவித்துக் கடல் கடந்து பண்டமாற்றும் வாணிகத் தொழிலை வளர்த்தது நெய்தல் நிலவாழ்வாகும்.

மருதநிலத்தார் கண்ட உழவு முதலிய தொழில்களும், நெய்தல் நிலத்தார் கண்ட கடல்வழி வாணிகமும் பெருகப் பெருக, அவர்தம் சிற்றார்களும் பேரூர்களாய் விரியத் தொடங்கின. அதனால், சிற்றார்த் தலைவர் பலர்க்கும் பெருந்தலைவனாகப் பேரூர் மன்னனொருவனைத் தேர்ந்து அமைத்துக்கொள்ளும் பொறுப்புச் சிறப்பாக மருதநிலத்தார்க்கு உரியதாயிற்று. உழவர்களால் தங்களுக்குரிய பேரூர்த் தலைவனாகத் தேர்ந்துகொள்ளப் பெற்றவனே வேந்தன் என வழங்கப் பெற்றான். உழவர்களுடைய முயற்சியால் நிலத்தில் விளையும் பொருள்களில் ஒரு பகுதியைக் கடமையாகக் கொண்டு சிற்றூர் பலவற்றையும் புரப்பது அவ்வேந்தனது இன்றியமையாக் கடமையாகக் கருதப் பெற்றது. நாளடைவில் கடலிற் கப்பல்களைச் செலுத்தி வாணிகம் செய்வதனைக் கண்காணிக்கும் பொறுப்பும் மன்னனுக்கு உரியதாய் அமைந்தது. உழவுக்கும் வாணிகம் முதலிய பிற தொழிலுக்கும் காவல் செய்யுங் கருத்தினால் நாளடைவில் உருவாகி நிலைபெற்ற குடும்பமே மன்னர் குடும்பமாகும். நிலை பெறுதல் என்னும் பொருளுடைய ‘மன்னுதல்’ என்பதன் அடியாகப் பிறந்த பெயரே ‘மன்னன்’ என்பதாகும். மக்களுடைய வாழ்வு நிலைபெற அவர்கள் நாட்டினை நிலைபெறக் காக்குங் கடமை பூண்ட பேரூர்த் தலைவன், மக்களால் மன்னன் என நன்கு மதித்துப் போற்றப் பெறுவானாயினன்.