பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் தொழில் நிலை

129



நிலைபெற்றுத் தங்கள் தொழிற்றிறத்தைப் பெருக்கினார்கள். இவ்வாறு நெசவுத் தொழிலைச் செய்தவர் 'காருகர்' என்ற பெயரால் அக்காலத்து வழங்கப்பெற்றனர். இக்காருக வினைத்தொழில் மிகவும் நுண்ணுணர்வுடன் செய்தற்குரியதாதலின், இதனை 'நுண்வினை' என இளங்கோவடிகள் சிறப்பித்துள்ளார். அக்காலத்து நன்றாகத் துாய்மை செய்யப்பெற்ற மெல்லிய நூலாலும் பட்டினாலும் நெய்யப் பெற்ற ஆடைகள் ஆவியைப் போன்ற மென்மையும், கண்ணினால் நோக்கி இழைகளைப் பிரித்துணர முடியாத செறிவும், காண்பார் கண் கவரும் பூங்கரைகளும், ஒளியும். உடையனவாய், எல்லாராலும் விரும்பப்பெறும் அழகினைப் பெற்றுத் திகழ்ந்தமையால், 'நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரியன்ன அறுவை', 'ஆவி யன்ன அவிர்நூற்கலிங்கம்', 'காம்பு சோலித்தன்ன அறுவை' எனப் புலவர் பலரும் பாராட்டியுள்ளனர். தறியில் நெய்து அறுக்கப்பட்டமையால், 'அறுவை' என்ற பெயர் உடைக்கு உரியதாயிற்று. நெய்த உடையினைச் சுருக்கமின்றி நன்றாக மடித்து விற்று வந்தமையால். அதற்கு 'மடி' என்ற பெயரும் வழங்குவதாயிற்று.

நுண்ணிய நூலினாலும் பட்டினாலும் திறம்பட நெய்யப்பெற்ற பல்வேறு புடைவைகளை விற்றற்குரிய கடை வீதிகள் பேரூர்தோறும் அமைந்திருந்தன. 'அறுவைவீதி' எனச் சிலப்பதிகாரத்திற் குறிக்கப்படுவது இத்தகைய வீதியேயாகும். நம் தமிழ் நாட்டில் நெய்த நுண்ணிய ஆடையினை வேற்றுநாட்டு மக்கள் விரும்பி வாங்கி உடுத்து மகிழ்ந்தார்கள் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர் உணர்ந்த உண்மையாகும்.

மக்கள் வாழ்க்கைக்குத் தேவையாகத் தம்பால் உள்ள பொருள்களைக் கொடுத்து இல்லாத பொருளைப்

9