பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



130

சங்ககாலத் தமிழ் மக்கள்



பிறர்பால் பெறுதல் 'பண்டமாற்று என வழங்கப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு நிலங்களில் வாழ்ந்த மக்கள், தத்தம் நிலத்திலுள்ள பொருளைக் கொண்டு சென்று மற்றை நிலங்களில் உள்ள உணவு முதலியவற்றைப் பண்டமாற்றுமுறையிற் பெற்று வந்தமை சங்க இலக்கியங்களிற் பேசப்படுகின்றது. இப்பண்ட மாற்று முறையே 'வாணிகம்' என ஒரு தனித் தொழிலாக வளர்ச்சி பெறுவதாயிற்று. கடற்கரையில் வாழ்ந்த பரதவர்கள், தங்கள் நிலத்திற்கிடைத்த மீன், உப்பு முதலியவற்றை மருத நிலத்தார் முதலியவர்க்குக் கொடுத்து, அவர்களிடமிருந்து நெல் முதலியன பெற்றார்கள். ஒரு நிலத்திலுள்ள பொருளை மற்றொரு நிலத்திற்குக் கொண்டு செல்லும் வணிகர்கள், அப்பொருள்களை வண்டிகளிலும், எருது முதலியவற்றின் மேலும் ஏற்றிக்கொண்டு கூட்டமாகச் சென்று விற்று வருவதுண்டு. இவர்கள் இடை வழியிற் கள்வர் முதலியவரால் நிகழும் இடையூறுகளை எதிர்த்தல் கருதிப் போரிற் பயின்ற வீரர்களைத் தங்களுக்கு வழித்துணையாக அழைத்துச் செல்வது வழக்கம்.



வணிகர்க்குத் துணையாகச் செல்லும் வீரர் திரளினைச் 'சாத்து' என வழங்குவர். அதனை நடத்திச் செல்லும் தலைவன் 'சாத்தன்' என வழங்கப் பெறுவன். இவ்வாறு உள் நாட்டின் படைத்துணை கொண்டு வணிகத் தொழிலை வளர்த்த தமிழ்நாட்டு வணிகர்கள், கடல் கடந்து வெளி நாட்டுடன் தொடர்பு கொண்டு வாணிகத் தொழிலை வளம்படுத்தினார்கள். இவர்களுடைய நன்முயற்சியால் கடலிற் காற்றின் பருவநிலையுணர்ந்து நாவாய் செலுத்தும் தொழிலில் தமிழ் நாடு முதலிடம் பெற்று விளங்கியது. புகார் நகரத்து வணிகர்கள் தரை வழியாகவும், நாவாயின்