பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

சங்ககாலத் தமிழ் மக்கள்

வேனிற்பள்ளி, கூதிர்ப்பள்ளி முதலியனவும் தமிழ்நாட்டுக் கம்மியர்களால் சிறப்பாக அமைக்கப்பட்டன. கட்டிடத் தொழிலுக்கு இன்றியமையாத தொழிலாளர், தச்சர் கொல்லர் முதலியவராவர். இவர்களுடைய உதவியின்றி மனை வகுத்தல் இயலாத செயலாம். மண்ணினாற்சுவரை எழுப்பிய செயலே விடுத்துச் சுட்ட செங்கற்களைக் கொண்டு செம்பினாற் செய்தாற் போன்ற திண்ணிய சுவர்களை அக்காலத் தொழிலாளர் எழுப்பிய தொழிற்றிறம் பெரிதும் பாராட்டுதற்குரியதொன்றாம்

.

மரத்தினை அறுத்து வீடமைத்தற்கும், வண்டி தேர் முதலியன செய்தற்கும் வழி கண்ட பெருமை தச்சர் என்னுந் தொழிலாளர்க்கே உரியதாகும், மக்கள் சுமந்து செல்லுதற்குரிய பாரத்தை எளிதிலே உருட்டி இழுத்துச் செல்லுதற்கேற்ற சகடையை அமைத்துதவிய திறம் தச்சுத் தொழிலின் நுண்ணுணர்வாகும். மக்கள் விரைந்து ஊர்ந்து செல்லுதற்குரிய தேர் முதலிய ஊர்திகளை உண்டாக்கியது. இத்தகைய தச்சுத் தொழிலேயாகும். நாளொன்றில் எட்டுத் தேர்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற தச்சர்கள் இந்நாட்டில் வாழ்ந்தார்கள். தச்சச் சிறுவர்கள் தங்கள் கையிலுள்ள உளி முதலிய கருவியினைக் கொண்டு காட்டிலுள்ள நல்ல மரங்களைச் செதுக்கி மக்கள் கையாளுதற்குரிய பொருள்களை இயற்றி வாழ்வு நடத்தினார்கள். வெண்கலம், செம்பு, இரும்பு முதலிய உலோகங்களையுருக்குந் திறம் பெற்று, அவற்றால் மக்கள் பயன் படுத்துதற்குரிய பல்வகைப் பொருள்களையும் படைக் கலங்களையும் செய்ய வல்ல வன்தொழிலாளர்கள் ஊர் தோறும் தங்கித் தங்களுக்குரிய தொழில் வகைகளைப் பெருக்கி வந்தார்கள். வெண்கலத்தையுருக்கிக் கலங்கள்