பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

சங்ககாலத் தமிழ் மக்கள்



அதனால், அவனுடைய குடும்பமும் படைப்புக் காலந்தொட்டு வழிவழியாக அழியாது நிலை பெற்று வருவதாயிற்று. வரையறுக்க முடியாக தொன்மைக் காலத்திலேயே தங்கள் நாட்டைப் பாதுகாத்தற்குரிய வேந்தர்களைத் தமிழ் மக்கள் பெற்றிருந்தார்கள்.

தமிழகம் பண்டைநாளில் மேற்குப் பகுதி, கிழக்குப் பகுதி, தெற்குப் பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இம்மூன்று பகுதிகளையும் முறையே சேரர், சோழர், பாண்டியர் என்றமூன்றுகுடும்பத்தவர்களும் ஆட்சி புரிந்து வந்தார்கள். தமிழகத்தின் மேலைக் கடற்கரையில் அமைந்த மலைகாட்டுப் பகுதியினை ஆண்டவர் சேரமன்னர். வடக்கே வேங்கடமலையினையும் தெற்கே திருச்சிராப்பள்ளி வளநாட்டையும் உள்ளிட்ட சிலப்பகுதியினை யாண்டவர் சோழமன்னர். இங்காட்டின் தென்பால் அமைந்த நிலப் பகுதி முழுவதனையும் ஆண்டவர் பாண்டிய மன்னர். இம்மூவேந்தரும் படைப்புக் காலந்தொட்டு இத்தமிழகத்தை ஆட்சி புரிந்த பழங்குடியினர் எனப்படுவர். கொடையும் ஆற்றலும் நிரம்பிப் புகழால் மேம்பட்ட இவ்வேந்தர் மூவரையும் ‘வண்புகழ் மூவர்’ என ஆசிரியர் தொல்காப்பியனார் பாராட்டிப் போற்றுகின்றார். சேர மன்னர்க்குப் பனை மாலையும், சோழர்க்கு ஆத்தி மாலையும், பாண்டியர்க்கு வேப்பமாலையும் அடையாள மாலைகளாகக் கொள்ளப் பெற்றன. இவ்வடையாள மாலைகளை அணிந்த படை வீரர்களை மூவேந்தரும் பெற்றிருந்தனர் என்பது,

“போந்தை வேம்பே ஆர்என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்”

என்ற தொல்காப்பியத் தொடரால் நன்கு விளங்கும்.