பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

சங்ககாலத் தமிழ் மக்கள்



துளைக்கருவியாகிய குழலினாலும், நரம்புக் கருவியாகிய யாழினாலும் ஏழிசையினையும் வழுவற இசைக்க வல்ல குழலர், பாணர் முதலிய இசைத் தொழிலாளர் தம் நுண் புலமையினால் இசைத் தமிழை வளர்த்து வந்தனர். அவர்களால் வளர்க்கப்பெற்ற இசைக்கலை மக்களுடைய மனமாசு கழுவி உடல் நோயினையும் அகற்றவல்ல திறம் பெற்று விளங்கியது. 'போரிற்புண்பட்ட வீரர்களின் நோய் நீங்க, அவர்தம் மனைவிமார் இசைபாடினர், எனப் புற நானூற்றிற் குறிக்கப்பெறும் செய்தி இவ்வுண்மையை வலியுறுத்துவதாகும். இசைத் தொழிலாளராகிய பாணர்களைப் போன்று, நாடகக் கலையில் வல்ல பொருநர், கூத்தர் விறலியர் என்பாரும் தத்தமக்குரிய கலைத்திறத்தினை மேன் மேலும் நயம் பெற வளர்த்து வந்தனர். இவர்களால் வளர்க்கப் பெற்ற இசைநாடகக் கலைகள் இவர்தம் பரிசில் வாழ்க்கைக்குரிய தொழில்களாகவே பிற்காலத்தில் கருதப் படுவனவாயின. பொன்னும் மணியும் என்பவற்றின் இயல்புணர வல்லவர்களும், சங்கினையறுத்து வளையல் செய்வாரும், நறுமணச் சுண்ணங்களே அமைக்க வல்லவர்களும், மாலை தொடுத்தல், பூ, வெற்றிலே முதலியன விற்றல் முதலிய தொழில்களில் ஈடுபட்டாரும், இன்சுவைப்பண்ணியம் (பலகாரம்) செய்து விற்கும் பெண்டிர்களும், கூலம் பகர்வாரும் என எண்ணற்ற தொழிலாளர்கள் சங்க இலக்கியுங்களிற் குறிக்கப்படுகின்றார்கள்.

அக்காலத் தமிழ் மக்கள் தங்கள் பிழைப்புக்கென ஏதாவதொரு தொழிலினைத் தங்களுக்குரியதாக மேற் கொண்டு உழைத்து வந்தார்கள் என்பது பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் என்ற நூல்களில் குறிக்கப்பட்ட தலைநகரங்களின் செயல் முறைகளால் நன்குணரப்-.