பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

சங்ககாலத் தமிழ் மக்கள்

 வதனால் பாராட்டத்தகும் சிறப்புடையதாகும் என்பது இனிது பெறப்படும்.

உயிர் வாழ்க்கைக்கு ஆக்கந்தரும் சமையற்றொழில் அக்காலத்து 'அட்டிற்றொழில்’என வழங்கப்பட்டது. இத் தொழிலில் தமிழர் நிரம்பிய தேர்ச்சியுடையராய்ச் சுவைக் கினிய அடிசிலை ஆக்கி விருந்தளித்தனர் என்பது சங்கச் செய்யுட்களிற் பாராட்டப்படும் பல்வேறு சுவைமிக்க உணவின் திறத்தால் இனிது புலனாம், புலால் கலந்த உணவினை சமைத்தலும், புலால் கலவா உணவினை சமைத்தலும் எனச் சமையல் முறை இருவகையாகக் கொள்ளப்பட்டது.

இரும்பு முதலிய உலோகங்களைக் காய்ச்சியுருக்கும் தொழிற்றிறம் பெற்ற தமிழ் வினைஞர்கள், கரும்பின் எந்திரம் கத்தரிகை முதலிய வாழ்க்கைக்கு வேண்டும் சிறு தொழில் புரியும் பொறிகளையும், அரண்களிலே பகைவரை வருத்துதற்குரிய பொறிகள் சிலவற்றையும் தங்கள் நுண்ணுணர்வால் ஆக்கியமைத்தமை சங்க நூல்களிற் குறிக்கப்பட்டுள்ளது.

ஆடையினை நன்றாக ஒலித்துக் கஞ்சி பூசி மடித்துக் கொடுக்கும் தொழிலை அக்காலத்து வண்ணார் மகளிர் செய்து வந்துள்ளனர். உணவு சமைத்தற்குரிய கலங்களை மண்ணினால் வளையும் புத்தி நுட்பத்தினையுணர்ந்தவர் வேட்கோவர் ஆகிய குயவராவர். செய்தற்கரிய இத்தொழிலில் வல்ல சிறுவர்களை 'நன்மதி வேட்கோச்சிறார்' என ஒரு புலவர் பாராட்டுகின்றார்.

இதுகாறும் கூறியவாற்றால் சங்ககாலத் தமிழ் மக்கள் தங்கள் நுண்ணறிவின் திறத்தால் வாழ்க்கை வளர்ச்சிக்கு இன்றியமையாத பல்வேறு தொழில்களையும் கண்டு வளர்த்து வந்தார்கள் என்பது ஒருவாறு விளங்குதல் காணலாம்.