பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

சங்ககாலத் தமிழ் மக்கள்

பால் பழைய சொற்கள் வழக்கிழந்து மறையாமலும், இலக்கண, இலக்கிய வரம்பு கோலித் தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தனர். அறிவையும், தொழிலையும் புலப்படுத்தி, மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவது மொழியென்றும், அம்மொழி இலக்கண, இலக்கிய வரம்பின்றி நாளுக்கொரு வகையாய்த் திரிபடைந்து மாறுமானால், முன்னுள்ளார் கருத்தைப் பின் வந்தாரும், அவர் தம் கருத்துக்களை இனி வருவாரும் உணர்ந்து கொள்ளுதற்கு வழியின்றி, அம்மொழியின் வழக்கியல் சிதைந்து கெடுமென்றும் நன்குணர்ந்தனர். ஆகவே, புலவர் பெருமக்கள் தம்மாற் பேசப்படும் தமிழ் மொழியைப் பொருள் தூய்மையும், தெளிவும் உடையதாக உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் நிலை பெற வளர்த்து வருவாராயினர். அதனால், தமிழ் மக்களுடைய கல்வி, வீரம், புகழ், கொடை என்னும் பெருமிதப் பண்பாடுகள் யாவும் புலமைக் கருவூலமாய் அவர்களாற் போற்றப்படும் தமிழ் மொழியுடன் ஒன்றுபட்டு வளர்வனவாயின.

ஒருவர் கருத்தை மற்றவர் உணர்ந்து கொண்டு, வாழ்க்கையில் முன்னேறுதற்குக் கருவியாயமைவது தாய் மொழி என்றும், அம்மொழி வாயிலாக வாழ்க்கையினைச் செம்மைப் படுத்தும் உணர்வினை வழங்குவார் புலவர் என்றும், உலகியற் பொருள்களை நுண்ணுணர்வுடன் ஆராய்ந்து, தாம் உணர்ந்த நற்பொருள்களைப் பாக்களாலும் உரைகளாலும் சுவை பெருக அமைத்துக் கேட்பார்க்கு அறிவுடன், இன்பத்தையும் வழங்க வல்லவர்களே நல்லிசைப் புலவர்கள் என்றும், அத்தகைய புலவர்களாற் பாடப் பெறும் புகழுடையார் இவ்வுலகிற் செய்யத்தகும் நல்வினைகளை முடித்து, வானுலக இன்பத்தையும் பெற்று மகிழ்வர்