பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கண்ட வருங்காலத் தமிழகம்

141

உடையான் கிள்ளி வளவன்,” எனப் பாராட்டி இரங்குகின்றார்.

பழந்தமிழ்ப் புலவர் தாம் கற்ற பெருங்கல்வியைத் தமிழ் மக்களுக்குப் பயன்படுத்தினர்; தம் அறிவுரைகளை மகிழ்ந்து கேட்பாரை மதித்தனர்; தாம் கூறும் அறவுரைகளைக் கேட்டுணரும் அறிவினைப் பெறாதார் மன்னராயினும், அவரை மதியாது இகழ்ந்தனர். "நற்பொருள்களை விளங்க எடுத்துரைத்தாலும் ஒரு சிறிதும் விளங்கிக்கொள்ள மாட்டாத பெருமையில்லாத மன்னர்களை எம் இனத்தவராகிய புலவர்கள் பாடமாட்டார்கள்," (புறம்-375) என உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் கூறுகின்றார்.

தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருளை ஈட்டி இனிது வாழும் வசதி பெறாத புலவர், ஈகையிற்சிறந்த வள்ளல்கள் முதலியவர்களை நாடிச் சென்று அவர்கள் மதித்தளித்த பரிசிற் பொருளைக் கொண்டு வாழ்க்கை நிகழ்த்த வேண்டிய நிலையில் வாழ்ந்தனர். “ எனது மனைக் கண் உண்ணுதற்குரிய உணவில்லாமையால், என் இளம் புதல்வன் தாய்ப்பாலும் பெறாது கூழையும் சோற்றையும் விரும்பி, அடுக்களையிலுள்ள கலங்களைத் திறந்து பார்த்து, ஒன்றுங்காணாது, அழுகின்றான். அவனுடைய அழுகையைத் தணிக்கக் கருதிய என் மனைவி, 'அதோ புலி வருகின்றது!' என அச்சுறுத்தியும், 'வானத்தில் அம்புலியைப் பார்!' என விளையாட்டுக் காட்டியும் அவன் அழுகை தணியாமைக்கு வருந்தி, 'நின்னுடைய பசி வருத்தத்தை நின் தந்தைக்குக் காட்டுவாயாக,' எனச் சொல்லி நின்று மனம் கவல்கின்றாள்,”[1]

எனப் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் பெருமான் தமது வறுமைத் துன்பத்-


  1. 1. புறம் 160.