பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகம்

9

சேர மன்னர்கள் வானளாவிய மலைகளில் வாழ்ந்தமையால், அங்குள்ள கொடிய விலங்குகளைத் தங்கள் வலிய வில் வேட்டையினாற்கொன்று போக்கினார்கள். வில்லாற் போர் செய்து வீரத்தை விளைவித்த இவ்வேந்தர்கள், வில் எழுதிய கொடியினைத் தங்களுக்கு அடையாளமாகக் கொண்டார்கள். பாண்டியர்கள் கடல் சார்ந்த நாட்டினை ஆண்டு வந்தமையால், அவ்வப்போது தங்கள் நாட்டிற்குக் கடல் கோளால் நேர்ந்த இடையூறுகளை எதிர் நோக்கி நின்று, தங்கள் குடிமக்களைக் கண்ணிமையாது காக்கும் உணர்வு மிகுதியுடையவர்களானர்கள். மீன் தன் கண்களால் நோக்கித் தன் குஞ்சுகளை வளர்க்குமாறு போலத் தம் குடிகளைக் கண்ணிமையாது நோக்கி நின்று கடல் கோளிற் காப்பாற்றிய பாண்டியர்க்குக் கயல் மீன் எழுதிய கொடி அடையாளமாயிற்று. சோழர்கள் ஆண்ட நிலப் பகுதி முன்னாளிற் காடாய் இருந்தமையால், அங்குள்ள புலி முதலிய விலங்குகளை வேட்டையாற்கொன்று போக்கிக் காடு கெடுத்து நாடாக்கினார்கள். வலி மிக்க புலிகளை வென்று மக்களுக்கு நலஞ் செய்த சோழர்களின் வெற்றி வன்மைக்கு அறிகுறியாகப் புலி எழுதிய கொடி அவ்வேந்தர்க்கு அடையாளமாயிற்று.

இம்மூவேந்தருடைய ஆட்சி, இன்ன நாளில் தமிழகத்தில் தோன்றியது என வரையறுத்துக் கூற முடியாத அத்துணைப் பழைமையானதாகும். தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வரும் பெரிய குடும்பத்திலே பிறந்தவர்களது தன்மையினை விளக்கக் கருதிய பரிமேலழகர், தொன்று தொட்டு வருதல்-சேர சோழ பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு வருதல்’, என இம்மூவேந்தர் குடும்பத்தின் பழைமையினை விரித்துரைக்கின்றார்.