பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கண்ட வருங்காலத் தமிழகம்

145

அந்நிலையிற் புலவர் பெருமக்கள் மன்னர்களின் வெகுளியைத் தணித்துத் தங்கள் அறவுரைகளால் அவர்களை நல்வழிப்படுத்தினார்கள். கோப்பெருஞ் சோழன் தன் மக்கள் தன் ஆணை வழியடங்காது அரசியலைக் கைப்பற்றிய பொழுது அவர்கள்மேற் சினங்கொண்டு போர் செய்யப் புறப்பட்டான். அங்நிலையிற் புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் பெருமான் தம் அறவுரைகளால் கோப்பெருஞ் சோழனது சீற்றத்தைத் தணிவித்துத் தந்தைக்கும் மைந்தர்க்கும் போர் நிகழாதபடி தடுத்தனர்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான், தன்பகைவனாகிய மலையமான்பெற்ற இளங்குழந்தைகளை யானையின் காலால் இடரச் செய்தற்கு முற்பட்டு நிற்கின்றான். அவ்விழி செயலைக் கண்டு உளம்பொறாத கோவூர் கிழார் என்னும் புலவர், செறுநரும்விழையும் சிறப்பமைந்த அவ்விளங் குழந்தைகளின் வனப்பினை இன்றமிழ்ச் செய்யுளால் எடுத்துரைத்து, மன்னனது உள்ளத்தினை உருக்கி அவ்விளங்குழந்தைகளை உய்வித்தருவளினார். “ஒரு புறாவினைப் பாதுகாத்தல்வேண்டி அப்பறவையின் நிறைக்கு ஈடாகத் தன் உடம்பின் தசையினை அறுத்துக்கொடுத்த அருளாளனாகிய சோழமன்னன் வழியிற் பிறந்த வேந்தர் பெருமானாகிய நீ, புலவர்களின் துயர்க்கிரங்கித் தம் பொருளைப் பகுத்து வழங்க வல்ல அருள் மிக்க மலையமான் குழந்தைகளாகிய இவர்களைக் கொலை செய்ய முந்துதல் அருவருப்பினை விளைக்கும் அடாத செயலாகும். தங்களைக் கொல்லுதற்கமைந்த யானையினைக்கண்ட இக்குழந்தைகள், தங்கள் அழுகையினை மறந்து இங்குக்கூடிய மக்களைப் பார்த்து மருள்கின்றார்கள். இவர்களைக் கொல்லுதல் நினக்கு நீங்காத பெரும்பழியை விளைப்பதாகும்,”