பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

சங்ககாலத் தமிழ் மக்கள்

எனக் கோவூர் கிழார் கிள்ளி வளவனை நோக்கி இடித்துரைத்து, மலையமான் குழந்தைகளை உய்யக் கொள்ளுங் திறம் வியந்து போற்றுதற்குரியதாம்.

விருப்பு வெறுப்பின்றி எல்லா மக்களையும் ஒப்பக் கருதி அறிவுரை வழங்குதல் புலவர்களின் இயல்பாகும். தமிழரசர்கள் தங்களுக்குள் பகைகொண்டபொழுது அவர்களுள் ஒருவர்பாற் சார்ந்து ஒற்றாய் நின்று கோட்சொல்லுந் தீச்செயலைப் புலவர் பெருமக்கள் எஞ்ஞான்றும் மேற்கொண்டதில்லை. சோழன் கலங்கிள்ளியினால் ஆதரிக்கப் பெற்ற இளந்தத்தனார் என்னும் தமிழ்ப் புலவர், அவன் பகைவனாகிய நெடுங்கிள்ளியால் ஆளப்படும் உறையூர்க்குச் சென்றார். அப்புலவரை ஒற்றர் எனப் பிழைபடக் கருதிய நெடுங்கிள்ளி, அவரைக் கொல்லும்படி கட்டளையிட்டான். இக்கொடுஞ் செயலையுணர்ந்த கோவூர்கிழார், அம்மன்னனை இடித்துரைத்துப் பிறரெவர்க்குந் தீமை கருதாத புலவர் பெருமக்களின் பெருந்தகவினை நன்கு விளக்கி, இளந்தத்தனாரை உய்யக்கொண்ட பாடலொன்று புறநானூற்றில் உள்ளது,

“வரையாது வழங்கும் வள்ளல்களை நினைத்துப் பழுத்த மரங்களை நாடிச் செல்லும் பறவைகளைப்போல நெடுந்துரங்கடந்து சென்று, பொய்யா நாவினால் அவர் தம் புகழினைப் பாடி, அவர் தரும் பரிசிற் பொருளால் தம் சுற்றத்தாரைப் பேணித்தம்பாலுள்ளதை வறுமையாளர்க்கு வரையாது வழங்கித் தாம் கற்று வல்ல கலைத்திறத்தாற் பெறும் பெருஞ்சிறப்பு ஒன்றினையே பொருளாக மதித்து வருந்தி முயலும் இப்புலவர் வாழ்க்கை, பிறர்க்குக் கடுகளவும் தீமை தருவதன்றாம். தாம் கற்ற கல்வித் திறத்தால் தம்முடன் மாறுபடுவார் நாணும்படி அவர்களை