பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கண்ட வருங்காலத் தமிழகம்

147

வென்று தலை நிமிர்ந்து நடப்பதல்லது, உலகினையாளும் பெருவேந்தர்களாகிய உங்களையொத்த பெருமிதத்தையும் உடையதாகும்,” எனக் கோவூர் கிழார் புலவர்களின் பண்பினை நெடுங்கிள்ளிக்கு அறிவுறுத்தி, இளந் தத்தனைக் காப்பாற்றுகின்றார். புலவர்களின் சான்றாண்மையினையும், அதனை நன்குணர்ந்து அவர்கள் ஆணை வழி அடங்கியொழுகிய தமிழ்வேந்தர்களின் செங்கோல் முறையினையும் மேற்காட்டிய நிகழ்ச்சிகளால் எளிதின் உய்த்துணரலாம்.

இங்ஙனம் தம் புலமைத் திறத்தால் தமிழகத்தை உய்விக்கத் தோன்றிய புலவர்களை அக்காலத் தமிழ் வேந்தர் தம் உயிரினும் சிறந்தாராக மதித்துப் போற்றினர். இவ்வாறு அரசர் பலரும் புலவர்களைப் போற்றுதற்கு அவ்வரசரும் பெரும்புலமை பெற்று விளங்கினமையே காரணமாகும். “புலம் மிக்கவரைப் புலமைதெரிதல்புலம் மிக்கவர்க்கே புலனாம்,” என்னும் வாய்மொழி இவண் கருதற்குரியதாம். சங்ககாலத் தமிழ்ப் புலவர்களுட் பெரும் பாலார், பிறர்பாற் பெறும் பரிசிலை விரும்பாது, தாமே பெருஞ் செல்வர்களாகவும் நிலக்கிழவர்களாகவும் வணிகம் முதலிய பல்வேறு தொழிலினராகவும் உரிமையுடன் வாழ்ந்தனர். வாழ்க்கையில் நுகர்தற்குரிய எல்லாநலங்களும் குறைவறப்பெற்ற அப்புலவர் பெருமக்களாற் பாடப்பெற்ற செய்யுட்கள்யாவும் வையத்துள் வாழ்வாங்குவாழும் தமிழர் நல்வாழ்க்கை முறையினைத் திறம் பெற விளக்குக் திட்பமுடையனவாய்த் திகழ்கின்றன. அரசர்களாலும் பொது மக்களாலும் நன்கு மதிக்கப்பெற்ற செந்தமிழ்ப் புலவர்கள் பெருகி வாழ்தற்கு நிலைக்களமாகிய தமிழகமானது தமிழ் வளம் கெழுமிப் புலமைத் துறையிலும் நாகரிகப் பண்புகளிலும் தலைசிறந்து திகழ்ந்தது.