பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

சங்ககாலத் தமிழ் மக்கள்

இனிமையும் எழிலும் பொருந்தியதாக உருவாக்கும் ஆற்றலுடையனவாய்த் திகழ்கின்றன.

நல்லறிவுடைய புலவர்கள், தம் புலமையின் பயனாகிய அருட்பண்பினையுடையவர்களாதலால், இந்நாட்டிற் பசியால் வருந்தும் பிறர் துயர்க்கு இரங்கி, அவர்தம் பசிநோயினை அகற்றுதற்குரிய நெறி முறைகளைத் தேர்ந்துணர்ந்தார்கள்; வறுமையால் வருந்துவாரது பசியினைத் தணித்தல் செல்வமுடையார் கடன் எனத் தெளிய உணர்ந்தார்கள். “இவ்வுலகத்தைத் தனக்கேயுரியதாகக் கொண்டு ஆட்சி புரியும் பெருவேந்தர்க்கும், இரவும் பகலும் விழித்திருந்து விலங்கு முதலியவற்றை வேட்டத்தாற் கொன்று திரியும் கல்வியில்லாத ஏழை வேடனுக்கும், உண்ணப்படும் உணவு நாழியளவினதே; உடுக்கப்படும் உடைகள் இரண்டே; பிறநுகர்ச்சிகளும் ஒரு தன்மையனவே; ஆதலால், செல்வமுடையார் செல்வத்தாற்பெறும் பயனாவது, வறியார்க்கு மனம் விரும்பிக் கொடுத்தலேயாம். 'செல்வத்தை யாமேநுகர்ந்து மகிழ்வேம்,' எனக் கருதிச், செல்வர்கள் ஈயாது. வாழ்வார்களானால், அதனால் அவர்களுக்கு விளையும் தவறுகள் மிகப்பலவாம்,” என நக்கீரனார் என்னும் புலவர் பெருமான் செல்வர்களுக்கு அறிவுறுத்துகின்றார்,

"வறியாரது பசியை மக்கள் அறம் நோக்கித் தீர்ப்பாராக! பொருள் பெற்றான் ஒருவன் அப்பொருளைச் சேமித்துவைக்குமிடம் அவ்வறச் செயலேயாகும்,” என்பர் தெய்வப்புலவர்.

மக்கள் தங்களுக்கு வகுக்கப்பட்ட வாழ்நாளளவும் நோயின்றி இன்புற்று வாழவேண்டுமெனக்கருதிய தமிழ்ச் சான்றோர், உடலிற் பிணிதோன்றாமைக்குரிய நல்லொழுக்க முறைகளையும், உடற்பிணியை அகற்ற வல்ல மருத்துவ