பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சங்ககாலத் தமிழ் மக்கள்


சேர மன்னர்களின் வில்லாற்றலும், பாண்டியர்களின் கல்வித் திறனும், சோழர்களின் உணவால் விளைந்த அறத்தின் வழிப்பட்ட பெருஞ்செல்வமும் ஒன்று சேர்ந்து துணை செய்தமையால், தமிழ் மக்களது அரசியல் வாழ்வு திறம்பெற மேம்படுவதாயிற்று. தமிழ் வேந்தர்கள் தமிழகமாகிய உடம்புக்கு உயிர்போன்று இன்றியமையாதவர்களாய் வினையாற்றி விளங்கினார்கள். அதனல், தமிழகம் இம்மூவர்க்கும் ஒப்ப உரியதாயிற்று. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என இத்தமிழகத்தை மூவேந்தர்க்கும் பொதுவாகத் தொல்காப்பியனார் உரிமை செய்து கூறுவர்.

மக்களை ஒரு நெறிமுறையில் வாழச் செய்யும் அரசியலமைதியே ஒரு நாட்டிற்கு முதற்கண் வேண்டப்படுவதாகும். இவ்வமைதி பெறாத காடு, வாழ்க்கை வளங்கள் எல்லாம் குறைவறப் பெற்றிருப்பினும், நாடாக சிலைபெறுதல் இயலாது. இந்நுட்பத்தினைப் பண்டைத் தமிழர் நன்குணர்ந்திருக்தனர்.

“ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.”

என்றார் தெய்வப்புலவர். “உடம்பை வளர்க்கும் உணவுப் பொருளாகிய நெல் முதலிய தானியங்களோ, அவை விளைதற்குக் காரணமாகிய நீரோ, இவ்வுலக வாழ்க்கையை நிலைபெறச் செய்வன அல்ல. மக்களை ஒருநெறிப்படுத்தி வாழ வழி வகுக்கும் ஆட்சித் திறனுடைய மன்னனே இவ்வுலகிற்கு உயிர் ஆவான். ஆதலால், ‘இவ்வுலகிற்கு உயிர் யானே’, என உணர்ந்து முறை செய்தல் வேந்தனது கடமையாகும்,” என மோசி கீரனார் என்னும் புலவர் கூறு-