பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகம்

13


நேரிற்கண்டு மகிழ்ந்தார் ; தாம் பெற்ற மகிழ்ச்சி தமிழ் மக்கள் உள்ளத்தில் என்றும் நிலைபெற்றிருக்க வேண்டும் என விரும்பினார். அவ்விருப்பத்தால் தம் நாட்டுத் தலைவனாகிய சோழ மன்னனை நோக்கிக் கூறியதாக அமைந்த புறநானூற்றுப் பாடல் (புறம் 58) படிப்பார் உள்ளத்தை உருக்கும் நீர்மையதாம்;

“வேந்தர் பெருமானே, நீயோ, குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன். நின் அருகிலுள்ள அரசர் பெருந்தகையாகிய இவனோ, தமிழ் வளர்க்கும் பாண்டியர் குடியுள் ஏறு போல்வோன். நீ அறந்தங்கும் பேருராகிய உறையூரின்கண் வீற்றிருக்கின்றாய். இவனனோ, தமிழ் பொருந்திய மதுரையின்கண் அரசு வீற்றிருக்கும் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன். நீவிர் இருவீரும் கண்ணன், பலதேவன் என்னும் இரண்டு பெருந்தெய்வங்களும் கூடி நின்றாற்போலப் பகைவர்க்கு அச்சக்தரும் தோற்றத்துடன் நண்பு செய்து ஒழுகுகின்றீர். ஆதலால், இந்த நட்பைக்காட்டிலும் தமிழகத்திற்கு இனிமை தருஞ் செயல்கள் எவையேனும் உளவோ? இவ்வாறே ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்து ஒழுகுவீராக! இப்பொழுதுள்ள நட்பினின்றும் வேறுபடாதிருப்பீரானால், கடல் சூழ்ந்த இவ்வுலகவுரிமை முழுவதும் உமது கையகத்தது ஆகும். உங்கள் ஒற்றுமைத் திறத்தைக்கண்டு பொறாமையுற்ற அயலார் சிலர், உங்களைத் தனித்தனியே அணுகி, நன்மை தருவன போலவும், நீதியொடு பொருத்தின போலவும், நும் முன்னோருடைய பழைய ஒழுக்கத்தை விரித்துரைப்பன போலவும் அமைந்த சொற்களை வஞ்சனையாகச் சொல்லி, உங்களை வேறுபடுத்தி, இகல் விளைத்தற்குச் சமயம் பார்த்துத் திரிகின்றார்கள். ஆதலால், அவர்-