பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சங்ககாலத் தமிழ் மக்கள்


களுடைய பொறாமை விளைக்கும் தீயசொற்களைக் கேளாது இன்றே போல என்றும் நண்பினாற் கூடி வாழ்வீராக!. நும்முடைய வேல் போர்க்களத்தின்கண் வென்று மேம்படுக நுமக்குப் பகையாயினருடைய குன்றுகள் புலியும் கயலும் ஆகிய அடையாளங்களைச் சேரப் பொறிக்கப் பெற்ற சிகரங்களையுடையன ஆகுக !” என்பது, அப்பாடலால் புலவர் கூறிய அறிவுரையாகும்.

இவ்வாறு கூறிய புலவர் பெருமக்கள் அறிவுரைகளை அக்காலத் தமிழ் மன்னர் கடைப்பிடித்து ஒழுகினமையால், சங்ககால அரசியல் மேன்மைபெற்று விளங்கியது. தங்கள் கருத்துவேற்றுமைகளை மறந்து தமிழ்ப் பணியில் ஒன்று பட்டு உழைக்க விரும்பும் இக்காலத் தமிழ் மக்களுக்கு இவ்வறிவுரை பெரிதும் பயன் தருவதாகும்.

பண்டைக்காலத் தமிழ் வேந்தர் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்று அம்முறையால் நாடாளும் உரிமை பெற்றவரல்லர்; தொன்று தொட்டு நாட்டினையாளும் வேந்தரது பழங்குடியிற்பிறந்ததனால் உளதாகிய உரிமையினாலே இந்நாட்டுக்கு அரசராய் விளங்கினர். தம்முடைய நற்குடிப் பிறப்பின் பயனாகத் தொடர்ந்து வரும் அறிவு திரு ஆற்றல்களினாலும், தம்மால் பயிற்றப்பெற்ற படை வீரர்களின் போர்த்திறத்தினாலும், மக்களது விருப்பத்திற்கேற்பத் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் சேனைத்தலைவர் முதலிய உடன் கூட்டத்து அதிகாரிகளின் வினைத்திட்பத்தினாலும் தமிழ் வேந்தர் தமக்குரிய எல்லையினை அறநெறி பிறழாது ஆண்டு வருவாராயினர். இவ்வாட்சி முடியாட்சியே. நாட்டு மக்களைத் தன் குடும்பத்தாராகவும் தன்னைக் குடும்பத் தலைவனாகவும் எண்ணிய மன்னன், மக்களுக்குத் துன்பந்தரும் இடையூறுகளை