பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சங்ககாலத் தமிழ் மக்கள்

இகழ்ந்து பேசினரெனவும், அச்செய்தியை முனிவர் சிலர் சொல்லக் கேட்டுச் சினந்தெழுந்த செங்குட்டுவன், வடநாட்டின்மேற்படையெடுத்துச் சென்று, கனக விசயர் இருவரையும் போரிற்பிடித்துக் கண்ணகியார் திருவுருவத்திற்குரிய கல்லினை அவர்தம் தலையில் ஏற்றிக் கொணர்ந்தானெனவும் வரும் வரலாறு இளங்கோவடிகளால் சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தில் விரித்துரைக்கப் பெறுகின்றது. தனது சேனை வடநாட்டின்மேற் செல்லுதற்குரிய நோக்கத்தினைக் கூறக் கருதிய செங்குட்டுவன்,

"காவா நாவிற் கனகனும் விசயனும்
விருத்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமி ழாற்றல் அறிந்திலர் ஆங்கெனச்
சீற்றங் கொண்டு, இச் சேனை செல்வது"

எனக் காரணங் கூறும் பகுதி, அக்காலத் தமிழ் வேந்தர்களின் தமிழுணர்ச்சியையும் அதன் வழித் தோன்றிய நாட்டுப் பற்றினையும் நன்கு புலப்படுத்துவதாகும்.

சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்களும் தமிழ்க்குலத்தாரது வளர்ச்சியைக் கருதி ஒற்றுமை உணர்ச்சியுடன் தமிழகத்தின் அரசியலை நிகழ்த்தினார்கள். அதனால், தமிழகம் ‘பூசல் அறியா எம் நன்னாடாய்த்’ திகழ்வதாயிற்று. தமிழ் நாட்டில் அமைதியாய் வாழ்ந்த தமிழ் மக்கள், எப்பொருளையும் தடையின்றி எண்ணியறியவும், உள்ளக் கருத்துக்களை உரிமையுடன் வெளியிட்டுரைக்கவும், எத்தொழில்களையும் தடையின்றிச் செய்து முடிக்கவும் வேண்டிய உரிமை உணர்வுடன் புகழ் பெற்று விளங்கினர்கள்.