பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
II
தமிழர் வாழ்வியல்

சங்ககாலத் தமிழகத்தின் அரசியல், உரிமை வாழ்வினை வளர்த்தற்குரிய வேலியாய் விளங்கியது. அதனால், அக்காலத் தமிழ் மக்கள் பசியும் பிணியுமற்று, நல்வாழ்வு வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்க்கையின் சிறப்பியல்புகளை ஒரு சிறிது நோக்குவோமாக:

மக்களது நல்லறிவின் பயனாய் அமைவது ஒழுக்கமாகும். வாழ்க்கையில் மேன்மேலும் உயர்ச்சி அடைதற்குக் காரணமாகிய ஒழுக்கவுணர்வுடைய மக்கள் ‘உயர் திணை’ எனச் சிறப்பிக்கப் பெற்றார்கள். அவ்வொழுக்கவுணர்ச்சியில்லாத ஏனைய உயிர்களும் உயிரல் பொருள்களும் ‘அஃறிணை’ என வழங்கப் பெற்றன. உலகப் பொருள்களையெல்லாம் உயர்திணை அஃறிணையென இரண்டாக வகுத்தலும் ; ‘ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல’ என ஐம்பாலாகப் பகுத்து வழங்குதலும் தமிழ் மொழியிலன்றி வேறு எம்மொழியிலும் காணப்படாத சிறப்பியல்புகளாம்.

விலங்கு முதலிய தாழ்ந்த உயிர்களினின்றும் மக்களைப் பிரித்து உயர்திணையாக உயர்த்துவது மனவுணர்வின்பாற்பட்ட நல்லொழுக்கமே. ஒழுக்கம் மேன்மேலும் உயர்வைத் தருதலால், அதனை உயிரிலும் சிறந்ததாகப் போற்றுதல் வேண்டுமெனத் தமிழ்ச் சான்றோர் அறிவுறுத்துவாராயினர். ஒழுக்கமில்லாதார், மக்கள் வடிவிற் காணப்பட்டாலும், மாக்கள் (விலங்குகள்) என்றே இழித்துரைக்கப்படுவர்.

பண்டைத் தமிழர் மாந்தர் எல்லாரையும் ஒரு குலத்தவராகவே மதித்துப் போற்றினர். ஒத்த அறிவும்