பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சங்ககாலத் தமிழ் மக்கள்

வுறுத்தினுர்கள். தமக்குரியார் என்று கருதி அவர் செய்யும் கொடுங் தொழிலைப் பொறுத்து முறை பிறழாமலும், அயலார் என்று கருதி அவர்களுடைய நற்குணங்களைக் கெடாமலும், ஞாயிற்றையொத்த வீரமும் திங்களையொத்த அருளாற்குளிர்ந்த மென்மையும் மழையைப் போன்ற பெருவண்மையும் உடையவர்களாகி, வறுமை என்பதே தம் நாட்டில் இல்லையாக நெடுங்காலம் அரசு புரிந்தார்கள்.

தமிழ் வேந்தர் எல்லாரும் மக்களுக்குக் கண் என்று போற்றப்பெற்ற கல்வித் துறையிற் சிறந்த பயிற்சியுடையவராய் விளங்கினர். அறநூற்றுறையிலும், அவ்வறத்தின் வழிப்பட்ட அரசியல் நூலிலும், போர்த்துறையிலும் நிரம்பிய பயிற்சியுடையவராய் விளங்கினர். அரசியற் கல்வியிலன்றி இலக்கியத் துறையிலும் நிரம்பிய அறிவுடையராய்ச் செய்யுள் பாடும் சிறப்பமைந்த செந்தமிழ்ப் புலவராயும் விளங்கினர் என்பது பண்டைத் தமிழ் வேந்தர்கள் பாடியனவாயுள்ள சங்கச் செய்யுட்களால் இனிது புலனாம். வேந்தராற் பாடப்பெற்ற செய்யுட்களெல்லாம் அவர்தம் உள்ளத்திலமைந்த விழுமிய எண்ணங்களை வெளிப்படுத்தி நாட்டு மக்களை உயர்த்தும் நலமுடையனவாய்த் திகழ்கின்றன. தமிழ வேந்தர் சிறந்த கல்வியுடையராகவே, அவர் தம் கல்வி அவரால் ஆளப்பெறும் நாட்டு மக்கள் எல்லாருக்கும் பயன்படுவதாயிற்று. ‘ஒரு நாட்டு அரசியலுக்கு இன்றியமையாது வேண்டப் பெறுவது கல்வியே,’ என்பதனைத் தமிழ் மக்கள் நெடுங்காலமாய் உணர்ந்திருந்தார்கள். ஆசிரியர் திருவள்ளுவனார் பொருட்பாலில் இறைமாட்சியினை அடுத்து அரசனுக்கு இன்றியமையாத கல்வியினை வற்புறுத்துரைத்தலால், இவ்வுண்மை நன்கு தெளியப்படும். கல்வியுடையார் கருத்தின் வழியே அரசியலும்