பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

33

நடைபெறுதல் வேண்டும் என அக்காலத் தமிழ் வேந்தர் எண்ணினர். கற்ற தமிழ்ப் புலவர்களைப் போற்றி, அவர்கள் அஞ்சாது கூறும் அறிவுரைகளை வெறுக்காது ஏற்றுக் கொண்டு, தமிழ் மன்னர்கள் தங்கள் தவறுகளைப்போக்கித் திருந்தி வாழ்ந்தார்கள். அரசன் பால் தவறு கண்டவிடத்து அவனை இடித்துரைத்துத் திருத்தும் உரிமை, அந்நாட்டில் வாழும் சான்றோர்களுக்கு உரியதாயிருந்தது. அக்கருத்தினால் அரசியல் வினைக்குழுவில் நாட்டிலுள்ள பெருமக்களுட் சிலரும் இடம் பெற்றிருந்து, குடிமக்களுடைய குறைகளை அவ்வப்போது அறிவித்து வருவாராயினர். ஐம்பெருங்குழுவில் ‘மாசனம்’ எனக் குறிக்கப்பட்டார் இத்கைய சான்றோரேயாவர்.

தமிழ் நாட்டில் தலைநகரங்கள் தோறும் அறங்கூறவையம் (நீதி மன்றம்) அரசர்களால் நிறுவப் பெற்றன. நாட்டிலுள்ள மக்களால் தீர்க்க முடியாத பெரிய வழக்குகளெல்லாம் இத்தகைய அறங்கூறவையத்தில் முடிவு செய்யப்படுவனவாம். இவ்வவையில் நீதி வழங்குதற்குரிய திறம் பெற்ற தலைவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் பொறுப்பு வேந்தனைச் சார்ந்ததாகும். அரசர்கள் நடு நின்று நீதி வழங்குதற்குரிய திறனுடையவர்களையே தேர்ந்து நியமித்தல் வழக்கம். இதன்கண் அமர்ந்து நீதி வழங்கும் முதியோர், இவ்வவையில் நுழைவதற்குமுன்னரே தம் உள்ளத்தமைந்த பழைய பகைமையினையும் மாறுபாட்டினையும் நீக்கிப் புகுவர். இத்தகைய நீதி மன்றங்கள் சோழர் தலைநகராகிய உறையூரிலும், பாண்டியர் தலைநகராகிய மதுரையிலும் அரசர் ஆதரவில் நிகழ்ந்தன. இவையேயன்றி, முறை வழங்கும் அவைகள் சிற்றார்களிலும் நிறுவப்பட்டிருந்தன. இவ்வவையின் இயல்பினை எட்டுவகை நுத-

3