பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

சங்ககாலத் தமிழ் மக்கள்

பயிர் செய்யும் ஒழுங்கு முறை தமிழ் நாட்டில் நிலைபெற்றிருந்தது.


பாண்டிநாடு மழையினை எதிர்பார்த்துப் பயிர் செய்யும் இயல்புடையதாகும். இவ்வியல்பினையுணர்ந்த குட புலவியனார் என்னும் புலவர், பாண்டியன் நெடுஞ்செழியனையடைந்து, நாடெங்கும் நீர் நிலைகளைப் பெருக்கவேண்டிய இன்றியமையாமையைப் பின் வருமாறு அரசனுக்கு அறிவுறுத்தினர்:


வேந்தே, நீ மறுமையுலகத்தின்கண் நுகரும் செல்வத்தை விரும்பினாலும், ஏனைய வேந்தரது தோள் வன்மையைக் நெடுத்து நீ ஒருவனுமே தலைவனாதலை விரும்பினாலும், இவ்வுலகத்தே நல்ல புகழை நிலைநிறுத்த விரும்பினாலும், அவ்விருப்பத்திற்குத் தகுந்த செயல் முறையினைச் சொல்கின்றேன் ; கேட்பாயாக : நீரை இன்றியமையாத உடம்பிற்கெல்லாம் உணவு கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவராவர். உடம்பு அவ்வுணவை முதலாகவுடையதாகும். உணவென்று சொல்லப்படுவது, நிலத்தொடு கூடிய நீர், நீரையும் நிலத்தையும் ஒரிடத்திற் கூட்டினவர்கள், இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவர்களாவார்கள். விதைகளை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் நாடு, விரிந்த நிலப்பரப்பை உடையதாயினும், தன்னை ஆளும் அரசனது முயற்சிக்குச் சிறிதும் பயன்படாது. ஆதலால், இதனைக் கடைப்பிடித்துப் பள்ளமாகிய இடங்களிலே விரைந்து நீர் நிலைகளை இயைவித்தவர், மறுமைச் செல்வமும் வெற்றித் திருவும் புகழும் ஆகிய மூன்றனையும் தம் பெயருடன் சேர்த்து நிலைபெறுத்தினாராவர். அவ்வாறு நீர்நிலைகளைத் தோண்டாது சோம்பியிருந்த மன்னர், இவ்வுலகத்துத் தம் பெயரை நிலைபெறுத்துதலில்லை.” என்பது புலவர் கூறிய அறிவுரையாகும்.