பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சங்ககாலத் தமிழ் மக்கள்



பயன்படுவதாம். நூறு வேலியளவுள்ள பெருநிலப் பகுதியாயினும், அதன்கண் யானையானது இவ்வாறு முறையாகப் பெறும் கவளத்தை விரும்பாது தானே புகுந்து தனித்து உண்ணத் தொடங்குமானால், யானை வாயின் கண் உணவாய்ப் புகுந்த நெல்லைவிட, அதன் கால்களாற் சிதைவது பெரும்பகுதியாகும். அவ்வாறே அறிவுடைய அரசன் மக்கள்பால் வரிபெறும் முறையை அறிந்து வரிகொள்வானாயின், அவனுடைய நாடு அவனுக்குக் கோடிக்கணக்கான பொருளைச் சேர்த்துக் கொடுத்துத் தானும் செல்வச் செழிப்புடையதாய் வளர்ச்சி பெறும். வேந்தன் அறிவின் திண்மை இல்லாதவனாகித் தரம் அறியாத அமைச்சர் முதலிய சுற்றத்துடன் கூடி அன்புகெடக் கொள்ளும் வரிப்பொருளை விரும்பித் தவறு செய்வானாயின், யானை புகுந்த நிலம் அவ் யானைக்கும் நிலைத்த உணவினைத்தாராது தானும் அழிவது போல, அவனும் உண்ணப் பெறான் ; குடிமக்கட்கும் வருத்தம் மிக, நாடு சிதையும்.”

புலவர் கூறிய பொருளுரையினைக் கேட்ட பாண்டியன், நாட்டு மக்கள்பால் பொருள்பெறும் நெறியறிந்து வரிப்பொருளை வாங்கும் அறிவுடைய வேந்தனாய் விளங்கினான். சான்றோர் கூறும் அறநெறியினைக் கடைப்பிடித்தொழுகும் இயல்பினை நன்குணர்ந்த மாந்தர், 'பாண்டியன் அறிவுடை நம்பி’ என அவனைப் பாராட்டிப் போற்றுவாராயினர்.

பாண்டியர் தென்கடற்கரையில் வாழும் நெய்தனில மக்களாகிய பரதவர்களைப் போரிற்பயிற்றித் தமக்குரிய படை வீரர்களாக்கிக் கொண்டார்கள் என மதுரைக்காஞ்சி என்னும் பாட்டுக் கூறும். சேரமன்னர்கள் தளர்ந்த குடி-