பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

49

யாவரானும் அணுகுதற்கரிய மலையின் உச்சியிலே அமைந்த கருநெல்லியினது அமிழ்தின் தன்மையுடைய பழத்தைத் தானே உண்டு நெடுநாள் வாழ விரும்பாது ஒளவையாரை உண்பித்த அதியமான் நெடுமானஞ்சியும், தம்முள்ளத்து நிகழும் எண்ணங்களை மறையாது கூறி நட்புச் செய்யும் பரிசிலர்க்கு அவர் மனையறம் நிகழ்த்துதற்கு வேண்டும் பொருளை நாடோறும் கொடுத்து மகிழ்ந்த நள்ளியும், தன் நாட்டின் நிலங்களைக் கூத்தர் முதலிய இரவலர்க்குக் கொடுத்து மகிழ்ந்த ஒரியும் ஆகிய இவ்வேழு வள்ளல்களும், நல்லியக்கோடன், நன்னன் முதலிய பிறரும் இரவலர்க்கு அளித்தலாகிய கொடைப் பாரத்தைத் தம்மேற்கொண்டு புலவர் பாடும் புகழுடையவர்களாய் விளங்கினார்கள். அதனால், ‘இல்லோர் செம்மல்’ என்றும், ‘இல்லோர் ஒக்கற் றலைவன்’ என்றும் மக்களால் வழங்கப் பெறும் மாண்பு இத்தகைய செந்தமிழ் வள்ளல்களுக்கே சிறப்பாக உரியதாயிற்று.

பிறரை ஏவும் முறையில் நீண்ட ஆணை மொழிகளைப் பேசுதலும், தாம் விரும்பிய இடங்களுக்கு நினைத்த மாத்திரத்திலே விரைந்து செல்லுதற்குரிய ஊர்திகளை ஏறி நடத்துதலும் செல்வத்தின் சிறப்பென அறிவில்லாதார் எண்ணியொழுகுவர். தம்மையடைந்தார் படும் துன்பத்திற்கு அஞ்சி அவர்கட்கு வேண்டுவன அருளும் இரக்கமுடைமையினையே பண்டைத் தமிழ்ப் புலவர் செல்வமெனப் பாராட்டினர். (நற்றிணை - 210)

மலை, சுரம், காடு, நாடு, கடற்கரை என்னும் நிலப் பகுதிகளுள் ஒன்றிற்பிறந்து, அங்கேயே தங்கியிருந்து வாழ்க்கை நிகழ்த்துபவர்கள் அவ்வந்நில மக்களாவார்கள். குறிஞ்சி நிலத்தவர் வழிபடும் தெய்வம் முருகன். மலை-