பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சங்ககாலத் தமிழ் மக்கள்

வாணர் மலையிலுள்ள மரங்களை அழித்து அங்கே ஐவனம் (மலைநெல்), தினை முதலியவற்றை விதைத்து, அருவி நீர் பாய்ச்சி, விளைவிப்பார்கள். ஆடையின்பொருட்டுப் பருத்தியைப் பயிரிடும் பழக்கமும் மலைவாணர்க்கு உண்டு. தினைப்புனத்திற் கிளி முதலியன புகுந்து உண்ணாதபடி மலைவாணர் மகளிர் குளிர், தட்டை முதலிய கருவிகளைக் கொண்டு ஒட்டிப் பகற்பொழுதில் புனம் காப்பர். தாம் விதைத்த தினை முதலியவற்றை யானை முதலியன உண்ணாதபடி இரவில் பரண்மீதமர்ந்து கவண் கற்களால் ஒட்டிக்காத்தல் குறவருடைய இயல்பாகும். வள்ளிக்கிழங்கு முதலியவற்றை அகழ்ந்தெடுத்தலும், மரத்தின் உச்சியில் தொங்கும் தேனடைகளை அழித்துத் தேனெடுத்தலும், மான் முதலிய விலங்கினங்களை வேட்டையாடுதலும் இம் மலைவாணர்க்குரிய தொழில்களாகும். மழை வேண்டுங் காலத்து நிறையப் பெய்தற்கும், வேண்டாத காலத்துப் பெருமழையைத் தடுத்தற்கும் மலைவாணர் கடவுளை மலர் தூவி வழிபட்டனர்; புதிதாய் விளைந்த தினையைக் கடவுளுக்கு இட்டு வழிபட்ட பின்னர் உண்பர் ; பன்றிகள் உழுத புழுதியின்கண்ணே நல்ல நாட்பார்த்து விதைத்த தினை முற்றி விளைந்ததனை அறுத்து, நல்ல நாளில் புதிதுண்ண வேண்டி மரையாவின் பாலை உலையாக அமைத்துச் சமைத்து, வாழையிலையிலே விருந்தினருடன் உடனமர்ந்து உண்பர். குன்றத்திலே வாழுங் குறவர்கள் மகப்பேறு கருதித் தங்கள் குலமுதலாகிய முருகக் கடவுளை வழிபடுவார்கள். அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டு நிலத்திலே விதைத்த தோரை நெல்லும், ஐவனம் என்னும் நெல்லும், மூங்கில் நெல்லும், மிளகும், அவரையும், வள்ளிக்கிழங்குகளும், பலா வாழை முதலிய பழங்களும் மலைநிலத்திற் பெருக விளைவன.